வசனம் 65
இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களின் காலத்துக்குப் பின்னர் இறைத்தூதராக தாவூத் (அலை) வந்தார்கள். (கி.மு.1024-963) இக்காலத்தில் வாழ்ந்த தாவூது நபி இஸ்ரவேலர்களை ஒருங்கிணைத்து ஃபலஸ்தீனில் வலுவான அரசொன்றை நிறுவினார்கள்.
வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வேண்டும். அது எந்த நாள் என்பதை இறைவனே முடிவு செய்யட்டும். அந்நாளில் இறை வணக்கத்தில் மட்டுமே ஈடுபடுவோம். அந்நாளை கண்ணியம் மிக்கதாகக் கருதுவோம். உழைத்துப் பொருளீட்டாமல் அந்நாளை மேன்மைப்படுத்துவோம் என அக்கால இஸ்ரவேலர்கள் வேண்டிக் கொண்டனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமையை வணக்கநாளாக இறைவன் அறிவித்தான். இது நடந்தது ஒரு துறைமுக நகரில் என்று மட்டும் குர்ஆன் (7:163) கூறுகின்றது. அது அகபா வளைகுடாவின் வட கோடியில் உள்ள துறைமுக நகரமான அய்லா எனும் ஊர்தான் என்று திருமறை விரிவுரைகளில் காணப்படுகின்றன.
அவ்வூர்வாசிகளில் பெரும்பாலோர் மீன் பிடித்து வாழ்க்கை நடத்தும் செம்படவர்கள். வாரத்தில் ஆறுநாட்கள் பொருளீட்டுவது, சனிக்கிழமை ஒரு நாள் வணக்க வழிபாட்டில் திளைத்திருப்பது என்று ஆரம்பத்தில் அவர்கள் முறையாகவே செயல்பட்டு வந்தனர். இதனால் கடலின் ஏனைய பாகங்களிலிருந்து அந்நகரின் கரையோரம் சனிக்கிழமை மட்டும் மீன்கள் திரளாக ஒதுங்கி வந்தன. மீன் பிடிக்க அனுமதிக்கப்பட்ட மற்ற நாட்களில் இவ்வளவு தாராளமாக மீன்கள் வருவதில்லை. இது அவர்களுக்குத் தரப்பட்ட ஒரு சோதனையே.
சனிக்கிழமை மட்டும் மீன்கள் கூட்டம் கூட்டமாய் கரையோரம் வருவதைக் கண்ட இஸ்ரவேலர்கள் சபலம் அடைந்தனர். அந்த மீன்களைப் பிடித்திட ஆர்வம் கொண்டனர். அதற்காக ஒரு தந்திரம் செய்தனர். சனிக்கிழமை வரும் மீன்களைப் பிடித்திட வெள்ளிக்கிழமையே முன்னேற்பாடுகளைச் செய்து வைத்தனர்.
முதல் நாளில் வலையை விரித்து வைத்து விடுவர். சனிக்கிழமை அதில் மீன்கள் சிக்கிக் கொள்ளும். ஞாயிற்றுக் கிழமை அவற்றை எடுத்து உண்பதற்கும் எஞ்சியதை விற்று லாபமீட்டியும் பயன்படுத்திக் கொண்டனர். ஒரு சிலரே ஆரம்பத்தில் இவ்வாறு தந்திர உபாயங்களைக் கடைப்பிடித்தனர்.
இவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து தண்டனை எதுவும் வராமலிருப்பதைக் கவனித்த மற்றவர்களும் இதுபோல் சனிக்கிழமை வரும் மீன்களைப் பிடிக்க வெவ்வேறு விதமான உத்திகளைக் கையாளத் தொடங்கினர். அச்சமுதாயத்திலுள்ள நல்லோர்கள் இதைக் கண்டித்தனர். அல்லாஹ்வின் தண்டனை வரும் என எச்சரித்தனர். எனினும் குற்றவாளிகள் திருந்தவில்லை. நாளடைவில் உத்திகளையும் உபாயங்களையும் கைவிட்டு நேரடியாக சனிக்கிழமை மீன் பிடிக்கலாம் எனும் அளவுக்கு அவர்களுக்கு துணிச்சல் வந்து விட்டது.
இதனையறிந்த அவர்களிலுள்ள நல்லடியார்கள் இவர்களிடமிருந்து தனியாக ஒதுங்கி வாழ்வதென முடிவெடுத்தனர். அவ்வூரில் குற்றவாளிகள் வாழும் பகுதிக்கும் தங்களின் வாழ்விடத்துக்கும் நடுவே ஒரு தடுப்புச் சுவரை எழுப்பிக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. குற்றவாளிகள் உபதேசம் எதையும் ஏற்பதாக இல்லை. திருந்தவும் இல்லை. இதனால் சனிக்கிழமையில் வரம்பு மீறியோர் மீது ஏகநாயன் அல்லாஹ்வின் சாபம் இறங்கிற்று. அவர்கள் உரு மாற்றப்பட்டனர். இதுபற்றி 7:163 - 166 வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது.
குரங்குகளாக மாற்றப்பட்ட குற்றவாளிகள் தம் இனத்தவர்களைக் கண்டு அழுதனர். மூன்று நாட்கள் மட்டுமே இக்குரங்குகள் வாழ்ந்தன. அம்மூன்று நாட்களாக அவை சாப்பிடவும் இல்லை. நீர் பருகவும் இல்லை இனவிருத்தியும் செய்யவில்லை. மூன்று நாட்களுக்குப் பின்னர் அவை அனைத்தும் இறந்துவிட்டன. (நூல்: குர்த்துபீ, இப்னு கதீர்)
குற்றவாளிகளில் இளைஞர்கள் குரங்குகளாகவும் முதியவர்கள் பன்றி களாகவும் மாற்றப்பட்டனர் என ஹழ்ரத் கதாதா (ரழி) கூறுகின்றார்கள்.
வசனம் 66
அவர்கள் அல்லாஹ்விடம் செய்து கொண்ட உடன்படிக்கையை முறித்து மனிதன் என்ற உயர்ந்த நிலையிலிருந்து வேண்டுமென்றே மிருகம் என்ற தாழ்ந்த நிலை நோக்கி இறங்கி விட்டனர். எனவே (மிருகங்களாக மாற்றப்படுதல் என்ற) இந்த தண்டனைக்கு உரித்தானவர்களாயினர். இந்த தண்டனை அக்காலத்தில் அல்லாஹ்வுக்கு மாறு செய்தோருக்குப் படிப்பினையாகவும், எல்லாக் காலங்களிலும் வாழ்கின்ற இறை நம்பிக்கையாளர்களுக்கு ஒரு நல்லுரையாகவும் அமைந்து விட்டது
(நூல்: ஃபீழிலாலில் குர்ஆன்)
அவர்களுக்கு ஏற்பட்ட அந்த இழிநிலை தங்களுக்கு வந்திடக்கூடாது என்றால் இறையச்சமுடையோர் அது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்பது இவ்வசனத்தின் கருத்து. அண்ணல் நபி(ஸல்) கூறியதாக ஹழ்ரத் அபூஹுரைரா (ரழி) கூறுகின்றார்கள்: “கீழான தந்திரங்கள் மூலம் இஸ்ரவேலர்கள் அல்லாஹ் தடை செய்ததை அனுமதிக்கப்பட்டதாக மாற்றியது போல் நீங்களும் செய்ய நினைக்காதீர்கள்”
(நூல்: இப்னு கதீர்)
தாவூது (அலை) காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர்களில் சனிக்கிழமை வரம்பு மீறி மீன் பிடித்தவர்கள் குரங்குகளாக உருமாற்றப்பட்ட வரலாற்றை அண்ணல் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த மதீனாவாழ் இஸ்ரவேலர்கள் அறிந்தே வைத்திருந்தனர். அதை நினைவூட்டி இவர்களை எச்சரிப்பதே இவ்வசனத்தின் நோக்கம்.
குரங்குகளாக மாற்றப்பட்ட இஸ்ரவேலர்கள் மூன்றே நாட்களில் இறந்து போயினர். எனவே இவர்களுக்கு சந்ததி கிடையாது. இப்போதுள்ள குரங்குகளுக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதே சரியான கருத்து.
ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) கூறுகின்றார்கள்: “இஸ்ரவேலர்கள் செய்த குற்றத்திற்காக அல்லாஹ் அவர்களை குரங்குகளாக மாற்றினான். பின்னர் அவர்கள் மூன்று நாட்களே உயிர் வாழ்ந்தனர். உருமாற்றப்பட்ட எவரும் மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழவில்லை.
குரங்குகள், பன்றிகள் ஏனைய படைப்புக்கள் அனைத்தையும் ஆரம்பத்திலேயே ஆறுநாட்களில் அல்லாஹ் படைத்துவிட்டான். (இதைத் திருக்குர்ஆனின் பல வசனங்கள் கூறுகின்றன.) அந்தக் குரங்குகள் போல் இஸ்ரவேலர்கள் மாற்றப்பட்டனர். அவ்வளவே.
(நூல்: இப்னு கதீர், குர்த்துபீ)
எனினும் ஒரு சிலர் இப்போதுள்ள குரங்குகளிலும் இன்னபிற மிருகங்களிலும் சிலவை உருமாற்றப்பட்ட இஸ்ரவேலர் களின் சந்ததிகளாக இருக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளனர். இதற்குப் பின் வரும் நபி மொழிகளை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
அண்ணல் நபி (ஸல்) கூறினார்கள்: இஸ்ரவேல் இனத்தில் ஒரு கூட்டம் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் தொலைந்து போனார்கள். அவர்கள் எலிகளாக (தான்மாறி) இருப்பார்கள் என்றே கருதுகிறேன். ஒட்டகத்தின் பாலை வைத்தால் அது குடிப்பதில்லை. ஆட்டுப் பாலை வைத்தால் குடிக்கிறது. இதை நீங்கள் கண்டதில்லையா?
(நூல்: புஹாரீ, முஸ்லிம் 2997)
நபிகள் (ஸல்) அவர்களிடம் சமைக்கப்பட்ட உடும்பு இறைச்சி கொண்டு வரப்பட்டது. அதை உண்ண மறுத்த நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்குத் தெரியவில்லை. இது உருமாற்றப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்ததாகக் கூட இருக்கலாம்.”
(நூல்: முஸ்லிம் 5003)
இஸ்ரவேலர்கள் ஒட்டக இறைச்சி சாப்பிட மாட்டார்கள். ஒட்டகத்தின் பாலை அருந்த மாட்டார்கள். எலிகளும் ஒட்டகப் பால் குடிப்பதில்லை என்பதே நபி (ஸல்) கூறிய வார்த்தையின் கருத்து.
இவ்விரு ஹதீஸ்களையும் அழுத்தமான ஆதாரங்களாக ஏற்க இயலாது. ஏனெனில் இந்த இரு ஹதீஸ்களிலும் உருமாற்றப்பட்ட இனத்தின் மூலம் வந்தவைகள் இப்போதுள்ள மிருகங்கள் என்பதை திட்ட வட்டமாக அறுதியிட்டுக் கூறவில்லை. “இருக்கலாம்” “கருதுகிறேன்” என்று யூகத்தை வெளிப்படும் வார்த்தைகளே இடம் பெற்றுள்ளன. உருமாற்றப்பட்ட இனத்தவர் எவரும் இனவிருத்தி செய்ததில்லை என்ற இறைச்செய்தி வருவதற்கு முன்பு அச்சம் கலந்த யூகமாக நபி (ஸல்) கூறியவை தான் இந்த இரு நபிமொழிகள்.
அந்த இறைச் செய்தி (வஹீ) வந்த பின் தன் யூகத்தை மாற்றிக் கொண்டார்கள். ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரழி) கூறுகின்றார்கள்: (இப்போதுள்ள) குரங்குகளும் பன்றிகளும் உருமாற்றப்பட்ட இனத்தில் உள்ளவை தானா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு உருமாற்றப்பட்ட எந்த இனத்தவருக்கும் சந்ததிகள் கிடையாது என்று நபி (ஸல்) கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம் 2663, குர்த்துபீ, மற்றும் தக்மிலத்து பத்ஹுல் முல்ஹிம்)
இப்போதுள்ள மிருகங்கள் எவையும் உருமாற்றப்பட்ட இனத்தின் வழித் தோன்றல்கள் அல்ல என்பதே சரியான கருத்து. மிகப் பெரும்பான்மையான விரிவுரையாளர் களும் இவ்வாறே கூறுகின்றனர். அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.
இந்த 2:66 வசனத்திற்கு மூன்று விதமான விளக்கங்கள் உள்ளன.
1. உருமாற்றப்பட்ட அழிக்கப்பட்ட அவ்வூர் மக்கள் பற்றி முந்தைய வேதங்கள் வழியாக அவர்களுக்கு முன்னால் வாழ்ந்த சமுதாயத்தினர் அறிந்திருந்தனர். எனவே (முற்கூட்டியே அறிந்து கொண்ட) அவர்களுக்கு இது ஒரு படிப்பினையாயிற்று, எனவே அந்த ஊர்வாசிகளுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தையும் அவர்களுக்குப் பின் வரும் சமுதாயத்தையும் இவ்வசனம் குறிக்கிறது.
2. அந்த ஊரைச் சுற்றிலும் வாழ்ந்து கொண்டிருந்த ஏனைய ஊர்மக்களை இது குறிக்கிறது.
3. சனிக்கிழமையில் மீன் பிடித்த குற்றச் செயலுக்கு முன்னரும் அதற்கு பின்னரும் அவ்வூர்வாசிகள் செய்த எல்லாப் பாவங்களுக்கும் இது தண்டனையாக அமைந்தது. இக்கருத்தை ஹழ்ரத் ஹஸன் (ரஹ்) கூறுகின்றார்கள்.
(தஃப்சீர் ராஸீயை மேற்கொள்காட்டி இப்னு கதீர்)
அம்மூன்று கருத்துக்களில், அவ்வூரைச் சுற்றிலும் வாழ்ந்த ஏனைய ஊர்வாசிகளில் யாரையெல்லாம் (அய்லா ஊர்வாசிகள் உருமாற்றப்பட்டு அழிக்கப்பட்ட) இத்தகவல் வந்தடைந்ததோ அவர்களுக் கெல்லாம் இது படிப்பினை என்ற கருத்தே ஏற்றமானது.
(இப்னு கதீர்)
இதைத் திருக்குர்ஆனின் வேறு சில வசனங்களும் உறுதி செய்கின்றனர்.
இவ்வூர்வாசிகள் பற்றி தகவல் அல்அஃராப் எனும் ஏழாவது அத்தியாயத்திலும் இடம் பெறுகிறது. அல்லாஹ் கூறுகிறான்: (அவ்வூரில் உள்ள நல்லோர்கள் அறிவுரை கூறிய போது) அவர்களில் சிலர் யாரை அழித்து விட வேண்டும் அல்லது தண்டனைக்குள்ளாக வேண்டும் என்று அல்லாஹ் நாடி விட்டானோ அந்தக் கூட்டத்தாருக்கு ஏன் நீங்கள் உபதேசம் செய்திட வேண்டும் என்று கேட்டனர். அதற்கு, உங்கள் இறைவனிடம் (குற்றங்களை கண்டித்தல் என்ற பொறுப்பை நிறைவேற்றி) பொறுப்பு நீங்கிடவும் குற்றம் செய்வதிலிருந்து அவர்கள் விலகி விடலாம் என்பதற்காகவுமே உபதேசம் செய்கிறோம் என்றனர். (அல்குர்ஆன் 7:164) அதாவது நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் என்ற கடமையை நிறைவேற்றவே உபதேசம் செய்கிறோம் என்றனர்.
அவர்கள் உபதேசிக்கப்பட்டதை மறந்தபோது தீமைகளைத் தடுத்துக் கொண்டிருந்தோரைக் காப்பாற்றி விட்டு அநீதி செய்தோரை அவர்கள் செய்த பாவத்தின் காரணமாகக் கடும் வேதனையால் பிடித்தோம். (அல்குர்ஆன் 7:165)
அதாவது தீமைகளைக் கண்டித்து அதைக் களைய முற்பட்டோர் தங்களின் முயற்சியில் வெற்றி பெற முடியாவிட்டாலும் தங்களின் பொறுப்பை நிறைவேற்றிவிட்டதால் தண்டனையிலிருந்து தப்பித்தனர்.
அச்சமுதாயத்தில் இன்னொரு பிரிவும் இருந்தனர். அவர்கள் சனிக்கிழமை வரம்பு மீறி மீன் பிடிக்கவில்லை. எனினும் வரம்பு மீறியோரைக் கண்டிக்கவும் இல்லை. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்தல் என்ற கடமையை நிறைவேற்றவில்லை இவர்கள், இந்த மூன்றாம் வகையினர் அழிக்கப் பட்டனரா அல்லவா? என்பதில் மாறுபட்ட கருத்து நிலவுகின்றது.
ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரழி) கூறுகின்றார்கள். “நடைபெற்ற தீமைகளை தடுத்துக் கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றினோம்.” (அல்குர்ஆன் 7:165)
அதாவது தீமைகளைக் கண்டித்து அதைக் களைய முற்பட்டோர் தங்களின் முயற்சியில் வெற்றி பெற முடியா விட்டாலும் தங்களின் பொறுப்பை நிறைவேற்றி விட்டதால் தண்டனையி லிருந்து தடுத்துக் கொண்டிருந்தவர்களைக் காப்பாற்றினோம்.” என்று (7:165) அல்லாஹ் கூறியிருப்பதால் தீமைகளைத் தடுத்தோர் மட்டுமே பாதுகாக்கப்பட்டனர். ஏனையோர் (தீமைகளைச் செய்தோரும் அதைக் கண்டுங்காணாமல் இருந்தோரும்) அழிக்கப்பட்டனர்.”
“அநீதி இழைத்தோரை அவர்கள் செய்த பாவத்தின் காரணமாக கடும் வேதனையால் பிடித்துக் கொண்டோம்” என்று (7:165) அல்லாஹ் கூறியிருப்பதால் பாவம் செய்தோர் மட்டுமே அழிக்கப் பட்டனர். ஏனையோர் (குற்றங்களைக் கண்டித்தவர்களும் கண்டிக்காதவர்களும்) பாதுகாக்கப்பட்டனர் என்று கருதலாம். (நூல்: இப்னு கதீர்)
தொடர்ச்சி 19ம் பக்கம்
8ம் பக்க தொடர்ச்சி
எனினும் இந்த மூன்றாவது வகையினர் பற்றி திருமறை குர்ஆன் எதுவும் கூறவில்லை. ஏனெனில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ கூட நன்மையை ஏவி தீமையைத் தடுக்கவில்லை. மவுனிகளாக முடங்கிக் கிடந்துவிட்டதால் அவர்களைப் பற்றியும் குர்ஆன் மவுனமாக இருப்பது சரியானதாகி விட்டது. அவர்கள் தண்டனைக்குரியவர்களாக ஆகாவிடினும் சரியே.
(நூல்: ஃபீழிலாலில் குர்ஆன்)
அல்லாஹ் எல்லாம் அறிந்தவன். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக