வெள்ளி, 2 ஜனவரி, 2015

எது முதலில்? இடம், காலம், சூழ்நிலை இவற்றிற்கு ஏற்ப வெவ்வேறு பணிகள் முன்னுரிமை பெருகின்றன.




வைகறை வெளிச்சம் நவம்பர் 2014 இதழ்

இடம், காலம், சூழ்நிலை இவற்றிற்கு ஏற்ப வெவ்வேறு பணிகள் முன்னுரிமை பெருகின்றன.

அதிமுக்கிய விடயம் ஒன்றை தெளிவுப்படுத்திட விரும்புகிறேன் இப்போது.பல்வேறு நன்மைகளில் எதை முதலில் செய்ய வேண்டும். எது சிறப்பான செயல் என்பதையெல்லாம் நாம் கூறி விடும்போது ஒன்றை நீங்கள் கவனிக்கத் தவறக் கூடாது.

முன்னுரிமை தரப்பட வேண்டியவை என்றும் மிகச் சிறப்பு வாய்ந்தவை என்றும் நாம் கூறி வருபவற்றில் பெரும்பாலானவை எல்லாக் கால கட்டத்துக்கும் எல்லா சூழ்நிலைகளுக்கும், எல்லா இடங்களுக்கும் எல்லா மனிதர்களுக்கும் பொதுவானவை என்று கருதிவிடாதீர்கள்.இடம், காலம், சூழ்நிலைகளுக்கு ஏற்ப நன்மைகளின் தரங்கள் மாறுகின்றன. 

இதுவரை நாம் பார்த்தவற்றில் பெரும்பாலானவை இப்படிப்பட்டவைதான். காலங்கள், தனிமனிதர்கள், பருவ மாறுதல்கள், இவைகள்தான் எவை சிறந்த செயல்கள் என்பதை தீர்மானிக்கின்றன. 

இதற்கு சில உதாரணங்களைத் தற்போது நாம் பார்ப்போம்.விவசாயம், சுயதொழில், வியாபாரம், இவற்றுள் எது ஏற்றமானது, அல்லாஹ்விடம் அதிக நன்மைகளை பெற்றுத் தருவது என்பதை முடிவு செய்வதில் அறிஞர்கள் மத்தியில் மாறுபட்டக் கருத்துகள் இருக்கின்றன.இவற்றின் சிறப்புகளை எடுத்துரைக்கும் நபிமொழிகள்தான் இவ்வாறான கருத்து வேறுபாடு எழுந்திடக் காரணமாக இருக்கின்றன.

பின் வரும் நபிமொழி விவசாயத்தின் சிறப்பைக் கூறுகிறது.`` யாரேனும் ஒரு முஸ்லிம் ஏதேனுமொரு செடியை நட்டு வைத்தாலோ அல்லது விவசாயம் செய்தாலோ அதிலிருந்து ஏதேனுமொரு பறவையோ மனிதனோ மிருகமோ சாப்பிட்டால் அது அந்த முஸ்லிமுக்கு தர்மத்தின் நன்மையத் தருகிறது ``( அறிவிப்பாளர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி, முஸ்லிம் )

பின்வரும் நபிமொழி சுயதொழிலின் சிறப்பை எடுத்தியம்புகிறது.`` தன் சுய உழைப்பினால் [கிடைக்கும் வருமானத்திலிருந்து] உண்பவரை விட சிறந்த உணவை யாரும் உண்பதில்லை. இறைத்தூதர் தாவூது (அலை) அவர்கள் சுயதொழில் செய்து சாப்பிட்டு வந்தார்கள். ``( அறிவிப்பாளர் : மிகதாம் (ரழி) நூல் : அஹ்மது, புஹாரி )

பின்வரும் நபிமொழி வியாபாரத்தின் மேன்மையை விளக்குகிறது.`` நேர்மையான வியாபாரி மறுமையில் இறைத்தூதர்கள், வாய்மையாளர்கள், உயிர்த்தியாகிகளுடன் எழுப்பப்படுவார். `` (அறிவிப்பாளர் : அபூசயீத் (ரழி) நூல் : திர்மீதி )

இந்த நபிமொழிகளை முன் வைத்து அறிஞர்கள் இம்மூன்றில் எது ஏற்றமானது என்பதை முடிவு செய்வதில் மாறுபட்ட கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.தலை சிறந்த மார்க்க அறிஞர்கள் இப்படியெல்லாம் வரையறுப்பதில்லை. மாறாக, சமூகத்தின் தேவைகளுக்கு ஏற்பவே முடிவு செய்ய முடியும் எங்கின்றனர்.

அதாவது உணவுப் பொருள் கள் குறைந்து விடும்போது, அன்றாட உணவுக்கே சமுதாயம் அல்லல்படும்போது மற்றவைகளை விட விவசாயமே சிறந்தது. ஏனென்றால் உணவின்றி வாழ்வில்லை. நம் அருகிலிருக்கும் தீமைகளில் மிகக் கொடியது பசிதான்.

எனவே பசியிலிருந்து சமுதாயத்தைக் காப்பதும் அதன் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் இப்போதுள்ள சூழ்நிலைகளில் முன்னுரிமை தரப்படவேண்டியதாகும். இதில் ஏற்படும் இன்னல்களையும் இடர்ப்பாடுகளையும் இன்முகத்தோடு எதிர் கொண்டு சகிப்புத் தன்மையுடன் இதில் ஈடுபடுவது மிகச் சிறந்த சேவையாகும் எங்கின்றனர் அறிஞர்கள்.

உணவுப் பொருள்களின் உற்பத்தி அதிகமாகிவிட்டால் எல்லோரும் ஏதேனுமொரு விவசாயத்தில் ஈடுபட்டுவிட்டால் தொழில் துறையை நோக்கி சமுதாயத்தின் தேவை திரும்பும்.இப்போது (யூதர்கள், கிருத்துவர்கள், சிலை வணங்கிகள்) போன்ற மாற்றுக் கொள்கையுடையோரைச் சார்ந்திருக்கும் அவலம் போக்கிடவும் வேலை வாய்ப்பை பெருக்கிடவும் ( போர்க்கருவிகளை உற்பத்தி செய்வதன் மூலம் ) முஸ்லிம் சமுதாயத்தின் கண்ணியத்தையும்தன் அரசின் எல்லைகளை காத்திடவும் உற்பத்தித் துறையில் முஸ்லிம் சமுதாயம் தன்னிறைவு பெற்றிடவும் தொழில் துறைக்கு முன்னுரிமை தந்திட வேண்டும்.

விவசாயமும் தொழிலும் எங்கும் வியாபித்துவிட்டால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களையும் தானியங்களையும் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்குக் கொண்டு செல்லும் தேவை ஏற்படும். இது உற்பத்தியாளார்களுக்கும், பணியாளர் களுக்கும் இடையே இருக்கவேண்டிய உறுதியான பாலம். இதை ஒரு வியாபாரிதான் செய்கிறார்.எந்த பொருள் மக்களுக்கு அதிகமாக தேவைப்படுமோ அந்தப் பொருளைப் பதுக்கி வைத்து கொள்ளை இலாபம் அடிக்கும் தீய நோக்கம் கொண்ட பேராசைக் காரர்கள் விற்பனைச் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும்போதும் சரக்குகளின் விலையை ஏற்றி இறக்கி விளையாடு வோர் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் போதும் வியாபாரம் செய்வதே ஏற்றமானது.

குறிப்பாக கொடுக்கல் வாங்களுக்காக, வியாபாரத்துக்காக தடம் புரளாத நேர்மையாளர்கள் இதில் ஈடுபட வேண்டும். தர்மம் வழங்குதல், தொழுகையை நிலைநாட்டுதல், இறைவனைத் துதித்தல் என தமது அறப்பணிகளை உலக அற்ப செல்வங்களுக்காக புரக்கணிக்காத நல்லவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு முன்னுரிமை தரப்படவேண்டும்.

நாம் வாழும் இந்த காலம் தொழில் நுட்பப் புரட்சியின் காலம். டெக்னாலஜி, எனப்படும் தொழில் நுட்பம் உலகையே வளைத்துப்பிடித்துத் தன் கையில் வைத்திருக்கின்றது.நம் சமுதாயம் தொழில் நுட்பத்துறையில் முனைப்புடன் ஈடுபடுவது காலத்தின் கட்டாயம். இதில் நாம் பின் தங்கவோ பதுங்கவோ கூடாது. அறிவாயுதம் ஏந்தி களம் புக வேண்டும்.

அல்லாஹ் நமக்கு இஸ்லாத்தின் மூலம் கண்ணியம் தந்தான். பேரருள் புரிந்தான். இந்தப் பேரருளை உலகெங்கும் பரப்பிட இக்காலத்தில் இதுவே உகந்த வழி. முஸ்லிம் சமுதாயம் இது விடயத்தில் நிராயுத பாணியாகவே நிற்கிறது. பரிதாபம். பரிதாபம்.இஸ்லாத்தை பரப்பிடும் இலட்சியத்தை அடைந்திட தொழில் நுட்பத் துறையின் போதனை முறைகளில் நாம் படிப்படியாக முன்னேற வேண்டும். மற்றவர்களை விட நாமே இதில் முன்னணியிலிருக்க வேண்டும். இதற்கு தேவையான கல்விகளை கற்கவேண்டும்.இது இஸ்லாத்தில் அவசியத்திலும் அவசியம். காலத்தின் கட்டாயம். இது ஒரு மார்க்க கடமை.

குறிப்பாக கொடுக்கல் வாங்களுக்காக, வியாபாரத்துக்காக தடம் புரளாத நேரமையாளர்கள் இதில் ஈடுபட வேண்டும். தர்மம் வழங்குதல், தொழுகையை நிலைநாட்டுதல், இறைவனைத் துதித்தல் என தமது அறப்பணிகளை உலக அற்ப செல்வங்களுக்காக புரக்கணிக்காத நல்லவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு முன்னிரிமை தரவேண்டும்.

தமிழ் வடிவம் : கே.எம். இல்யாஸ் ரியாஜி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக