புத்தகத்தை படிக்க இங்கே சொடுக்கவும்
சென்னையில் துப்புரவு தொழிலாளி ஒருவர் “Manhole” என்றழைக்கப்படும் திறப்புக் குழிக்குள் மூழ்கி இறந்தார் என்றொரு செய்தி மக்களை வந்து தாக்கிற்று.
அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தாம் இந்த மலம் அள்ளும் தொழில் முதற்கொண்டு எல்லா துப்புரவு பணிகளையும் செய்து கொண்டிருக்கின்றார்கள். உண்மையைச் சொன்னால் அவர்களை வேறு தொழில்களை செய்திட அனுமதிப்பதில்லை, இந்திய சமுதாய அமைப்பு.
இந்த மரணம் ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக நடக்கின்ற ஒன்றல்ல. ஆண்டொன்றிற்கு 22,120 அருந்ததியர் இப்படி இறந்து போகின்றார்கள். அல்லது இந்திய சமுதாய அமைப்பால் கொலை செய்யப்படுகின்றார்கள்.
இந்தியாவில் 10 லட்சம் அருந்ததியர் இந்தப்பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் 95 விழுக்காடுகள் பெண்கள் (
Safai -Karmachari andolam. website
ஆரோக்கியமற்ற சூழலில் வாழ்வதால் பல கொடுமையான நோய்களுக்கும் அவர்கள் ஆளாகின்றார்கள்.
டெல்லி மாநகரில் 1,26,000 திறப்புக்குழிகளும் சென்னையில் 46,000 திறப்புக்குழிகளும் இருக்கின்றன. இவற்றில் மூழ்கி அடைப்பெடுக்கும் கடினமான பணி இந்தச் சமுதாயத்தின் திருப்பணி. இதில் தான் இவர்கள் தங்களை இழக்கின்றார்கள். எல்லாவற்றையும் விட அவர்கள் சமுதாயத்தின் தீண்டத்தகாதவர்களாகவும் அருவெருப்பானவர்களாகவும் ஒதுக்கி வைக்கப் படுகின்றார்கள். இவர்களின் உயிருக்காக உரிமைக்காக கண்ணியத்திற்காக வாதாடுவோர் போராடுவோர் மிகக் குறைவு.
தமிழகத்தில் தந்தை பெரியாரின் சீரிய தொண்டால் அவர்களின் பிரச்சனைகள் மக்கள் மன்றத்தில் வந்தன.
நீதியின் குரல்கள் ஒலித்தன. அதன் பயனாகப் பதவிகள் பல அவர்களுக்கு கிடைத்தன. இதனால் 1946களிலேயே தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகராக பேரவைத்தலைவராக தலித் பெருங்குடி மக்களைச் சார்ந்த சுப்பிரமணிப்பிள்ளை அமர்த்தப்பட்டார்கள். 1955ஆம் ஆண்டு வரை அதாவது ஏறத்தாழ பத்தாண்டு காலம் பேரவைத்தலைவராக வீற்றிருந்தார்.
கலைஞர் ஆட்சியிலும் அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவரே துணை சபாநாயகராக இருந்தார். அருந்ததியர் சமுதாயத்தவர்கள் இடஒதுக்கீட்டைப் பெற்றார்கள்.
அதிமுக ஆட்சியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சார்ந்த தனபாலன் அவர்கள் துணை சபாநாயகராக அமர்த்தப்பட்டார். இப்போது அவர் சபாநாயகராக அதாவது பேரவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். பாராட்டுக்கள்.
வழங்கப்படும் பதவிகள் அருந்ததியர் சமுதாயத்தை அதாவது தலித் சமுதாயத்தின் இழிவை நீக்கிட வில்லை என்பது தாம் நமது இந்திய ஜனநாயகத்தில் கண்டு வரும் கசப்பான உண்மை.
இந்தியாவின் குடியரசு தலைவர், தலைமை நீதிபதி, அமைச்சர் பதவிகள், நாடாளுமன்ற சபாநாயகர் என தலித் பெருங்குடி மக்கள் அலங்கரிக்காத பதவிகளே இல்லை.
ஆனால் இவையெல்லாம் அவர்களுக்கு “மனிதன்” என்ற அடிப்படை கண்ணியத்தை பெற்றுத்தந்திடவில்லை.
தமிழகத்தின் பேரவைத்தலைவராக பதவி ஏற்ற தனபாலன் அவர்களை வாழ்த்திப்பேசிடும் போது முன்னாள் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் சிவசண்முகம் பிள்ளை அவர்களை மேற்கோள் காட்டி ஓர் உண்மையை பொட்டில் அறைந்தார் போல் சொன்னார். அது “மன்றங்களில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் மட்டும் தாழ்த்தப்பட்டோருக்கு முன்னேற்றத்தை பெற்றுத்தந்துவிடாது. மற்ற சமுதாய மக்களிடம் மனமாற்றம் ஏற்பட்டால் தான் தாழ்த்தப்பட்டோர் தடையேதுமின்றி முன்னேற முடியும்” (முரசொலி, 11.10.2012)
மற்ற சமுதாயங்களின் மனமாற்றம் என்பது ஏட்டுச்சுரைக்காய் தான் என்பது வரலாறு நமக்குச் சொல்லும் உண்மை சாட்சியம்.
இதற்கு பரமக்குடி துப்பாக்கிச் சூடு இன்றைய தடயம். இதனால் தான் இந்த மக்களின் கண்ணியத்திற்காக தன் வாழ்நாளை செலவிட்ட தந்தை பெரியார் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இந்த இழிநிலை நிரந்தரமாக அகலும் என்றார்கள்.
1947 மார்ச்சு திங்கள் 18ஆம் நாள் திருச்சியில் ரெயில்வே தொழிலாளர்களிடம் உரை நிகழ்த்திய தந்தை பெரியார் அவர்கள் இஸ்லாத்தை சாதியின் பெயரால் கற்பிக்கப்படும் அநியாயங்களுக்கு தீர்வாக சொன்னார்கள். சிலர் அதை எதிர்த்து சில கடிதங்களை பெரியாருக்கு எழுதினார்கள்.
அவற்றிற்கு பெரியார் இப்படி பதில் சொன்னார்கள்.
“இஸ்லாத்தில் ஒரே ஒரு இறைவன் தான், அவனுக்கு உருவம் கிடையாது. அங்கே சாதி இல்லை. பேதங்கள் இல்லை. உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடுகள் இல்லை. இவையே திராவிடத்தின் அடிப்படை கொள்கை. பல தெய்வ கொள்கையில் ஆரியர்கள் பல வசதிகளையும் நன்மைகளையும் அடைந்துள்ளார்கள். அதே நேரத்தில் திராவிடர்கள் பல தீமைகளைத் தத்தெடுத்துக் கொண்டார்கள். ஆரியர்கள் இஸ்லாத்தை வெறுத்தார்கள். காரணம் சூத்திரர்களுக்கும் பறையர்களுக்கும் நன்மையை ஊட்டுகின்றது இஸ்லாம்.
எல்லாரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் பிராமணர்களுமில்லை. பல தெய்வ கொள்கையுமில்லை....இதனால் இந்துக்களின் நெஞ்சங்களில் நஞ்சை விதைக்க அவர்கள் இஸ்லாத்திற்கெதிராகப் பொய் பிரச்சாரங்களைச் செய்து வருகின்றார்கள்.” Source : The way to solvation : By Dr. B.R. Ambedkar & Periyar E.V.Ramasamy : AMAN Publications : Delhi : 53 (Promoted by Prof. A.M. Dharmalingam)
மனிதர்கள் அனைவரும் சமம் என்ற செயல்முறையை இஸ்லாம் தெளிவான அடிப்படைகளின் கீழ் அமைக்கின்றது. இறைவன் இதனை இப்படி பிரகடனப்படுத்துகின்றான். “மனிதர்களே ! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஓர் ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் அவ்விருவரிலிருந்தே அநேக ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வையே பயந்து கொள்ளுங்கள்...அல்குர்ஆன் அத்தியாயம் 4: வசனம் 1
இன்னும் இறைவன் கூறுகின்றான்:
“ மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (அல்குர்ஆன் 49:13)
அல்லாஹ்வை அஞ்சும் ஒழுக்கத்தில் உயர்ந்தோரே உயர்ந்தோர், மற்றெல்லாரும் தாழ்ந்தோர்.
இறைவனின் இறுதித் தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள் : “அரபுக்களை விட அரபி அல்லாதவர்கள் உயர்ந்தவர்களல்ல, அரபி அல்லாதவர்களை விட அரபுக்கள் உயர்ந்தவர்களல்ல”
இந்த வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே இன இழிவுகளுக்கெதிராக நிரந்தரமாக வாகை கண்டனர். இந்த இஸ்லாத்தை ஏற்போம்! இழிவுகளை அகற்றுவோம். இன்ஷா அல்லாஹ்
குறிப்பு :
தந்தை பெரியார் அவர்கள் திராவிடர்களின் கொள்கையும் ஏகத்துவமேயென குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. இதனை ஆய்வுகள் மூலம் நிரூபித்தால் இன்ஷா அல்லாஹ் மொத்த திராவிடமும் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்படலாம். அறிஞர் பசுங்கதிர் எம்.கே.ஈ. மௌலானா அவர்கள் எழுதிய “சேதுமுதல் சிந்து வரை” என்ற நூலில் பல தகவல்கள் உள்ளன. ஆய்வு செய்திட விரும்புவோர்க்கு. - எம்.ஜி.எம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக