புதன், 14 நவம்பர், 2012

தரீக்குல் குரான் - மவுலவி கே. எம். இல்யாஸ் ரியாஜி

புத்தக வடிவில் படிக்க இங்கே சொடுக்கவும்
இதற்கு முந்தைய வசனங்களில் இஸ்ரவேலர்கள் இழிவுக்கும் இறைவனின் கோபத்திற்கும் ஏன் ஆளாயினர் என்பதன் காரணங்கள் கூறப்பட்டன.  எனினும் எல்லா இஸ்ரவேலர்களுக்கும் இறைவனின் கோபத்திற்கு ஆளாகிவிட்டனர் என்பதல்ல.  அவர்களில் நல்லோரும் இருந்தனர் என்ற தகவலும், அந்த நல்லோருக்கு அவர்கள் செய்த அறச்செயல்களுக்கான கூலி வீணடிக்கப்படாமல் அவர்களுக்கே வழங்கப்படும் என்பதும், யூத, கிறிஸ்தவ, இன்னபிற இனத்தில் பிறந்து விட்டதாலேயே ஒருவன் கதி மோட்சம் பெற்றிட முடியாது; நற்செயல் புரிந்தோரே நற்கூலி பெறமுடியும் என்பதும் இவ்வசனத்தில் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.
 இவ்வசனம் நான்கு வகையினர் பற்றிப் பேசுகிறது.
1. நம்பிக்கை கொண்டோர்: நம்பிக்கை கொண்டோம் என்று வாயளவில் கூறிக்கொண்டு இதயத்தில் இணை வைப்பையும் இறைமறுப்பையும் சுமந்து திரியும் நயவஞ்சகர்கள் போன்றில்லாமல் உளப்பூர்வமாக ஈமான் கொண்டவர்கள்.
2. யூதர்கள்: இறைத்தூதர் மூஸா (அலை) அவர்களின் சமூகத்தினர், யஅகூப் (அலை) அவர்களின் மூத்த புதல்வரான யஹுதா என்பவரின் வழித்தோன்றல்கள் என்பதால் இஸ்ரவேலர்களுக்கு இப்பெயர் வந்தது.  இவர்கள் மூஸா நபிக்குப் பின்னர் இறைத்தூதராக வந்த ஈஸா நபியையோ அவர்களை அடுத்து வந்த இறுதித் திருத்தூதர் அண்ணலெம் பெருமானார் (ஸல்) அவர்களையோ நம்பிக்கை கொள்ளாமல் யூதர் கொள்கையிலேயே இருந்து கொண்டு “நேர்வழியில் இருப்போர் நாங்களே” எனப் பேசினர்.
3. நஸாரா: இஸ்ரவேலர்களில் ஈஸா நபியைப் பின்பற்றியோர் நஸாரா என அறியப்படுகின்றனர்.  உதவியாளர்கள் என்பது இதன் பொருள்.  இவர்கள் தங்களிடையே பரஸ்பரம் உதவிக் கொள்வதால் இப்பெயர் அவர்களுக்கு வந்தது.  (இப்னு கதீர்)
 அல்லாஹ் கூறுகின்றான்: “ஈஸா எனக்கு அல்லாவுக்காக உதவி செய்வோர் யார் எனக் கேட்டார்.  அதற்கு (அவருடைய) சீடர்கள், அல்லாஹ்வுக்காக நாங்கள் உதவி செய்வோராக (அன்சார்) இருப்போம் எனக் கூறினர்.” (திருக்குர்ஆன் 61:14) இவ்வசனத்தை சான்றாக வைத்து அன்சார் என்று (கிறிஸ்தவர்களுக்கு) ஒரு பெயர் உண்டு.  (குர்த்துபீ, இப்னு கதீர்)
 மேலும் நாஸிரத்(ழிணீக்ஷ்மீக்ஷீணீtலீ) எனும் ஊரில் வாழ்ந்து வந்ததால் இவர்களுக்கு இவ்வாறு (நஸாரா என்று) பெயர் வந்ததாக சிலர் கருதுகின்றனர். (ரூஹுல் மஆனி, இப்னு கதீர்)
 இறைத்தூதர் ஈஸா நபியைப் பின்பற்றும் இவர்கள் ஈஸா நபியை அடுத்து வந்த முஹம்மது நபி (ஸல்) அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் நாங்களே நேர்வழி பெற்றோர் எனக் கூறிக்கொண்டனர்.
4. ஸாபிஈன்: நபித்துவத்திற்கு முன்னர் அரபுலகில் வாழ்ந்து கொண்டிருந்த இணை வைப்போரில் ஒரு பிரிவினர்தான் இவர்கள்.  தங்களின் சமுதாயம் சிலைகளை வணங்கிக் கொண்டிருப்பது சரிதானா அது மெய்யான மார்க்கம் தானா என்ற சந்தேகம் இவர்களை சூழ்ந்து நின்றது. இதனால் தாங்கள் விரும்பும் ஒரு மார்க்கத்தைத் தேடிக் கொண்டிருந்தனர்.  ஓரிறைக் கோட்பாடே நேர்வழி எனக் கண்டு கொண்டனர்.  இவர்கள் தான் ஸாபிஈன் ஆவர்.  இதுவே சரியான கருத்து.
 மேலும் இப்றாஹீம் (அலை) அவர்கள் காட்டிய பூர்வீக நேர்வழியின் அடிப்படையில் வணக்க வழிபாட்டை அமைத்துக் கொண்டு நேர்வழிக்கான எந்த அழைப்பும் (தஃவா) இன்றியே சிலை வணக்கத்தை விட்டு தூர விலகி நின்றனர். இவர்களை ‘முன்னோரின் மார்க்கத்தைக் கைவிட்டோர்’ (ஸாபிஈ) என்று மக்கா வாழ் இணை வைப்போர் அழைத்தனர்.  (பின்னாளில் முஸ்லிம்களையும் இவ்வாறே அவர்கள் அழைத்தனர்) இதனால் அவர்கள் ஸாபிஈன் என்றழைக்கப்பட்டனர்.  சில விரிவுரை நூல்களில் இடம் பெற்றிருப்பது போல ஸாபிஈன் என்றால் நட்சத்திரத்தை வணங்குவோர் என்று கூறுவதை விட இதுவே சரியான கருத்து. (நூல்: ஃபீழிலாலில் குர்ஆன்)
 ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மக்கள் அக்காலத்தில் அனுப்பப்படும் இறைத்தூதரை ஏற்று நம்ப வேண்டும்.
 மூஸா நபியை இறைத்தூதர் என ஏற்று தவ்ராத் காட்டும் வழி முறைப்படி வாழ்வோர் அக்காலத்தில் உண்மையான இறை நம்பிக்கையாளர் ஆவார்.  இது ஈஸா நபி அவர்கள் இறைத்தூதராக வரும் வரைதான், அவர்கள் வந்த பின்னரும் ‘நான் ஈஸாவை நம்பமாட்டேன்; மூஸா நபியையே நம்புவேன்; தவ்ராத்தை மட்டுமே ஏற்பேன்; இன்ஜீலை ஏற்கமாட்டேன் என்று கூறினால் அப்படிக் கூறுபவன் யூதன் என அறியப்படுவான், ஆனால் வெற்றி பெற்ற இறைநம்பிக்கையாளனாக அவன் ஆக முடியாது.
 இது போலவே, ஈஸா நபியை இறைத்தூதர் என ஏற்று, இன்ஜீல் வேதம் காட்டும் வழியில் வாழ்வோர் அக்காலத்தில் உண்மையான இறை நம்பிக்கையாளர் ஆவர்.  இது இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வரும் வரைதான்.  அவர்கள் வந்த பின் ஈஸாவையே நம்புவேன்.  முஹம்மது நபியை நம்பமாட்டேன்.  இன்ஜிலையே ஏற்பேன்.  திருக்குர்ஆனை ஏற்கமாட்டேன் என்று கூறினால் அப்படிக் கூறுவோர் நஸாரா (கிறிஸ்தவர்) என அறியப்படுவர்.  ஆனால் வெற்றி பெற்ற இறைநம்பிக்கையாளர் ஆக முடியாது.      (இப்னு கதீர்)
 ஹழ்ரத் இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்: முதலில் இந்த 62வது வசனம் இறங்கியது.  பின்னர், “இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து ஒரு போதும் அது ஏற்கப்படாது.  அவர்கள் மறுமையில் நஷ்டமடைந்தோருடன்தான் இருப்பர்”  (திருக்குர்ஆன் 3:85) என்ற வசனம் இறங்கிற்று.  எனவே 2:62வது வசனத்தின் கருத்தை 3:85 வசனம் மாற்றிவிட்டது.   (நூல்: இப்னு கதீர், குர்த்துபீ)
 இந்த 2:62 வசனத்தின் கருத்து என்னவெனில், மேற்கூறப்பட்ட வகையினரில் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி நற்செயல் புரிந்தோருக்குக் கவலை ஏதுமில்லை.  அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.  (மனதில் உள்ள அகீதா) நம்பிக்கைதான் கவனிக்கப்படுகிறது.  இவர் எந்தக் குலத்தில் பிறந்துள்ளார், எந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர் என்று கவனித்து நன்மை வழங்கப்படுவதில்லை.  இது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் திருத்தூதராக வரும் வரைதான்.  அதற்குப் பின்னர் ஈமான் இறுதி வடிவம் பெறுகின்றது.  (எனவே அண்ணல் நபியை ஏற்றுக் கொண்டவர்தான் அல்லாஹ்வின் உண்மையான அடியார் ஆவார்.) (நூல்: ஃபீழிலாலில் குர்ஆன்)
 அல்லாஹ் கூறுகின்றான்: “அல்லாஹ்வையும் எங்கள் மீது இறக்கியருளப்பட்ட (வேதத்)தையும் இன்னும் இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப், அவர்களின் வழித்தோன்றல்கள் ஆகியோர் மீது இறக்கி அருளப்பட்டவற்றையும் இன்னும் மூஸா ஈஸா இன்னும் மற்ற நபிமார்கள் ஆகியோருக்கு அவர்களின் இறைவனிடமிருந்து வழங்கப்பட்டவை (வேதங்)களையும் நாங்கள் நம்பினோம்.  அவர்களில் யாரையும் பிரித்து வேற்றுமை காட்டமாட்டோம்.  அவனுக்கே கட்டுப் பட்ட முஸ்லிம்கள் ஆவோம் என்று (நபியே) கூறுங்கள்.”   (அல்குர்ஆன் 3:84)
 இந்த வசனத்தில் எல்லா இறைத்தூதர்களையும் எல்லா வேதங்களையும் உண்மைதான் என நம்புபவரே உண்மையான இறை நம்பிக்கையாளர் எனத் தெளிவாக்கப்பட்டு விட்டது.  நபிமார்களின் சிலரை ஏற்று சிலரை ஏற்காமல் புறக்கணிப்பவர்கள் உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் அல்ல.
 யூதர்கள் ஈஸா நபியை இறைத்தூதர் என ஏற்பதில்லை.  கிறிஸ்தவர்கள் (நஸாராக்கள்) மூஸா நபியை ஏற்பதில்லை.  எனவே இருவரும் உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் இல்லை.
 ஆனால் முஸ்லிம்கள் எல்லா இறைத் தூதர்களையும், எல்லா வேதங்களையும் நம்புகின்றனர்.  இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் நம்பி அவர்கள் காட்டிய நேர்வழியில் நடக்கின்றனர்.  எனவே இவர்களே உண்மையான இறைநம்பிக்கையாளர்கள் ஆவர், 3:84 வது வசனத்தின்படி,
 மேலும் யூதர்கள், கிறிஸ்தவர்கள் இரு இனத்தவருமே இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்களின் மார்க்கத்தைச் சார்ந்தவரே என்று கூறி வந்தனர்.  இதன் மூலம் தங்களின் கொள்கையே சரியானது என்று இரு தரப்புமே நிறுவிட விரும்பினர்.
 ஆனால் உண்மை என்னவெனில் மூஸா (அலை), ஈஸா (அலை) ஆகியோர் இறைத்தூதர்களாக ஆனதும் தவ்ராத், இன்ஜீல் ஆகிய வேதங்கள் இறக்கி அருளப்பட்டதும் இப்ராஹீம் (அலை) அவர்களின் காலத்துக்குப் பின்னர்தான்.  பிறகு எப்படி அவர்கள் யூதராகவோ கிறிஸ்தவராகவோ இருந்திட இயலும்? உங்களுக்கு சிறிது கூட ஞானம் இல்லாத விஷயத்தில் ஏன் விவாதம் செய்கின்றீர்கள் என்று அவ்விரு சமுதாயத்தினரையும் பார்த்து அல்லாஹ் கேட்கின்றான்.
 அதுமட்டுமல்ல இப்றாஹீம் (அலை) அவர்கள் யூதராகவோ, கிறிஸ்தவராகவோ இருக்கவில்லை.  இணை வைத்து வணங்குபவராகவும் இருக்கவில்லை.  அல்லாஹ்விடம் முற்றிலும் சரணடைந்து நேர்மையான முஸ்லிமாக இருந்தார்.  மேலும் மனித சமுதாயத்தில் இப்றாஹீம் (அலை) அவர்களுக்கு மிகவும் நெருங்கியவர்கள் யாரென்றால் அவர்களைப் பின்பற்றி வாழ்ந்தவர்களும் இந்த இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் மற்றும் அல்லாஹ்வையும் இந்த இறுதித்தூதரை நம்புவோரும் தானே அன்றி இந்த இறுதித்தூதரைப் புறக்கணித்து வாழ்கின்ற யூத, கிறிஸ்தவர்கள் இப்ராஹீம் நபிக்கு  நெருக்கமானவர்களாக ஆகிவிட முடியாது என்றும் அல்லாஹ் திட்டவட்டமாக கூறிவிட்டான்.
 இது தொடர்பான தகவல்கள் திருக்குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஆலஇம்ரானில் 65 முதல் 68 வரையுள்ள வசனங்களில் காணலாம்.
 இந்த வசனங்களிலும் (இறுதித்தூதர் உள்ளிட்ட எல்லா இறைத்தூதர்களையும் நம்ப வேண்டும் என்ற) அகீதாவின் அடிப்படையிலேயே நற்கூலி வழங்கப்படும்; யூத, கிறிஸ்தவ இனத்தில் பிறந்து விட்டதாலேயே அவர் நேர்வழி பெற்றவராக கருதப்பட மாட்டார் என்று தெளிவாக்கி யுள்ளான் அல்லாஹ்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக