ஒரு பாராட்டு.
ஒரு திருத்தம். ஒரு
வேண்டுகோள்.
தமிழகத்தின் தலைநகரமாம் சிங்காரச் சென்னையின் புறநகர்
பகுதியான ‘கீழ்கட்டளை’யில்
பட்டப்பகலில் ஒருவங்கிக்குள் புகுந்து
மேலாளரையும் இதரப் பணியாளர்களையும் மிரட்டி பதினான்கு லட்சரூபாயை கொள்ளையடித்துச் சென்றது ஒரு
கும்பல்.
இந்தச் செய்தி
ஊடகங்களில் பரபரப்பாகிக் கொண்டிருக்கும்போதே இந்தியாவுக்கு வெளிநாட்டுக் கரன்சிகளை வாரித்தந்து கொண்டிருக்கும் தலைசிறந்த தொழில்
நகரமான திருப்பூரில் ஒரு
நகைக் கடைக்குள் புகுந்த
கொள்ளைக் கும்பல் பதினான்கு
கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை அள்ளிச் சென்றிருக்கிறது.
இது பரப்பான
செய்தியாகிக் கொண்டிருக்கும் போது
வழிப்பறிக் கொள்ளைகளும் செயின்
பறிப்புக்களும் சிறு சிறு
செய்திகளாகவோ அல்லது செய்திகளாகாமலோ போய் விடுகின்றன.
வங்கிக் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்கள் எனக் கூறி
(வேளச்சேரிப்பகுதியில் தங்கியிருந்த) ஐந்து
இளைஞர்களை தமிழகக் காவல்துறை
சுட்டுக் கொன்றிருக்கிறது. ‘மாபெரும் கொள்ளைக்
கும்பலை சுட்டுத் தள்ளிவிட்டோம்’ என்று காவல்துறை பெருமிதம்
பொங்க பேசிக்கொண்டிருந்தபோதே மதுரையில் ஒரு
வங்கிக்குள் புகுந்த சிலர்
அந்த வங்கியின் (வாடிக்கையாளர்களின் கணக்கு வழக்குகள் பதியப்பட்டுள்ள) ‘கம்ப்யூட்டரின் ஹாட் டிஸ்க்கு’களை திருடிச்
சென்றுள்ளனர்.
அதிமுக அரசு
அமைந்துவிட்டால் சட்டம் ஒழுங்கு
தமிழகத்தில் கொடிகட்டிப் பறக்கும்
என்று மாய்ந்து மாய்ந்து
பிரச்சாரம் செய்தவர்கள் எங்கே
போனார்கள் என்றே தெரியவில்லை. எதிர்கட்சியினரையும் தன் கட்சியிலுள்ள தனக்கு வேண்டாதவர்களையும் மிரட்டவும் கைது
செய்யவும் தான் தமிழகக்
காவல்துறையை அதிமுக அரசு
பயன்படுத்தி வருகிறது. இதனால்தான் கொள்ளையும் கொள்ளைக்காக கொலையும்
தமிழகத்தில் மலிந்துவிட்டது என்ற
குற்றச்சாட்டை ‘பசையற்றது’ என்று
கூறி ஒதுக்கிவிட முடியவில்லை.
தமிழகக் காவல்துறை
தமிழகத்தில் நடத்திய மிகப்பெரிய என் கவுண்டர் (மோதல்சாவு)
இதுதான். அதாவது வங்கிக்
கொள்ளையர்கள் எனக் கூறி
காவல்துறை சுட்டுத்தள்ளிய ஐந்து
இளைஞர்களின் என் கவுண்டர்தான்.
காவல்துறை நடத்திய
இந்த என் கவுண்டரை
ஏற்றும் மறுத்தும் விவாதங்கள் சூடாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழலில் விவாதத்தினூடே ஒரு
கருத்து முன் வைக்கப்படுகின்றது. ‘திருடியவனின் கையை வெட்ட வேண்டும்’
என்ற “அரபு நாட்டுச்
சட்டங்களால் தான் திருட்டை
நிறுத்த முடியும்” என்பதே
அது.
முதலில், கொள்கையளவில் என்றில்லாவிட்டாலும் கருத்தளவில் இஸ்லாமிய
தண்டனைச் சட்டங்களை ஏற்றுக்
கொண்டுள்ளனர் சிலர். ஒரு
காலத்தில் முரட்டுச் சட்டங்கள்.
மனித நேயமற்ற தண்டனைகள்
என்று பிதற்றியவர்கள் கருத்தளவில் இஸ்லாமிய தண்டனைச் சட்டங்களை
ஏற்றுக் கொண்டிருப்பதற்குப் பாராட்டுக்கள்.
ஒரு திருத்தம்.
அவை அரபு நாட்டுச்
சட்டங்களல்ல. அல்லாஹ் வழங்கிய
சட்டம். மனித குலம்
முழுவதும் ஏற்று நடந்திட
ஏற்ற சட்டம்.
ஒரு வேண்டுகோள். திருட்டுக்களும் கொள்ளைகளும் கற்பழிப்புக்களும் இன்ன
பிற சமூகத் தீமைகளும்
நச்சு நாகமெனப்படமெடுத்து ஆடும்போது மட்டும்
அரபு நாட்டுச் சட்டங்கள்
(அல்லாஹ்வின் சட்டங்கள் என்பதே
சரி) தேவை என்று
கருத்துப் பதிவு செய்து
விட்டு சமூகத் தீமைகளுக்கு எதிரான அணியில் நானும்
நிற்கிறேன் எனக் காட்டிவிட்டு கடமை முடிந்துவிட்டதெனக் கருதாமல் இந்த
தண்டனைச் சட்டங்கள் தேவை
என்பதை ஒரு இயக்கமாக்கி அதை நிலைநாட்ட தொடர்ந்து
முயற்சிப்பதே நாம் செய்ய
வேண்டியது.
திருடியவர்களின் கையை வெட்டுவது
மட்டுமே திருட்டைத் தடுத்துவிடாது. இது திருட்டு நடந்த
பிறகு தரப்படும் தண்டனை
மட்டுமே. திருட்டைத் தடுத்திட
சில சமூக சீர்
திருத்தங்களும் சில மன
மாற்றங்களும் தேவை.
திருடியவர் ஆணாக
இருப்பினும் பெண்ணாக இருப்பினும் அவர்கள் செய்த தீய
செயலுக்காக அவர்களின் கையை
வெட்டுங்கள் (5:38) என்ற இறை
மறை வசனத்துக்கு விளக்கம்
தந்த பேரறிஞர் ஷஹீத்
ஸய்யித்குதுப் (ரஹ்) அவர்கள்
இப்படிச் சொன்னார்கள்.
ஒருவன் திருடனாக
மாறுவதற்குரிய எந்த சமூகச்
சூழலையும் இஸ்லாம் விட்டுவைக்கவில்லை. ஒருவன்
தன் வாழ்வாதாரத் தேவைகளுக்காக உழைத்துப் பொருள் ஈட்டும்
வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்குமானால் அவனுடைய தேவைகளை
அவனுடைய உறவினர்கள் நிறைவேற்றிட வேண்டும். உறவினர்களும் இவனைப்
போல் வறியவர்களாக இருந்தால்
அந்த மஹல்லாவாசிகள் (பகுதிமக்கள்) அதைச் செய்திட வேண்டும்.
அவர்கள் வாய்ப்பற்றவர்களாக இருந்தால் இஸ்லாமிய
அரசு பொது மக்களிடமிருந்துபெற்ற ‘ஸகாத்’
எனும் கட்டாய தர்மத்திலிருந்து இந்த ஏழைகளின் தேவைகளைப்
போக்கிட வேண்டும். கட்டாய
தர்மத்தின் வழி திரட்டப்பட்ட பொதுநிதி தீர்ந்து போய்விட்டால் ‘ஸதகா’ எனும் உபரியான
தர்மத்தை பொது மக்களிடமிருந்து திரட்டி அவற்றை ஏழ்மைப்
பட்டவர்களுக்குப் பகிர்ந்தளித்திட வேண்டும் இஸ்லாமிய
அரசு.
இவ்வாறாக தன்
அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிட வழிகள் திறந்திருக்கும் போதே ஒருவன்
திருடுகிறான் கொள்ளையடிக்கின்றான் என்றால் அது
பேராசையின் விளைவாக வரும்
பாவம். சமூக அநீதி.
இந்த அநீதியைச் செய்தவனின் கை வெட்டப்பட வேண்டும்.
(நூல்:- ஃபீழிலாலில் குர்ஆன்)
திருட்டுக் குற்றம்
நிரூபிக்கவனின் வலதுகை மணிக்கட்டுவரை துண்டிக்கப்பட்டுவிட்டால் அவன் உலகில்
வாழும் காலமெல்லாம் அவமானத்தைச் சுமந்தபடியே செல்வான். இன்னொரு
முறை திருடக் கூடாது
என்ற படிப்பினையை இவனுக்கு
இந்தத் தண்டனை தருவதுபோல
இவனைப் பார்ப்பவர்களுக்கும் ‘திருடினால் என்ன
கிடைக்கும் தெரியுமா?’ என்ற
எச்சரிக்கையையும் தருகிறது.
இதனால் தான்
தண்டனை தருவதற்கு தயக்கமோ
தாமதமோ காட்டுவதில்லை இஸ்லாம்.
வரலாற்றில் ஒரு செய்தி.
ஸஃப்வான் பின்
உமையா (ரழி) அவர்கள்
மதீனாவுக்குவந்து மஸ்ஜிதுன் நபவீ
என்ற நபியின் பள்ளிவாசலில் படுத்து உறங்கினார்கள். தம்
துண்டை (அங்கி) தலைக்கு
(தலையணைபோல்) வைத்திருந்தார்கள். அதன் விலை
சுமார் முப்பது திர்ஹம்.
(திர்ஹம் - வெள்ளிக்காசு) அங்கே
அப்போது வந்த ஒருவர்
அந்தத்துண்டை மெல்ல உருவினார்.
எடுத்துக் கொண்டு ஓட
முற்பட்டார். உறங்கிக் கொண்டிருந்த ஸஃப்வான் பின் உமையா
(ரழி) விழித்தார்கள். எழுந்தார்கள். சுதாரித்தார்கள். கையும் களவுமாய்ப் பிடித்துவிட்டார்கள் திருடியவரை.
நபியிடம் இழுத்து
வந்தார்கள். “அல்லாஹ்வின் திருத்தூதரே... இவர் என் துண்டைத்
திருடிவிட்டார்” என்றார்கள். வழக்கை
விசாரித்த நபி இது
திருட்டுக்குற்றமே என்று முடிவு
செய்து குற்றவாளியின் கையை
(மணிக்கட்டுவரை) வெட்டிவிட உத்தரவிட்டார்கள். அப்போது குறுக்கிட்ட அந்த
துண்டின் உரிமையாளர் ஸஃப்வான்
பின் உமையா (ரழி)
“அல்லாஹ்வின் திருத்தூதரே... இப்படி
நடக்கும் என்று நான்
நினைக்கவில்லை. முப்பது வெள்ளிக்காசுகள் பெருமதியுள்ள ஒரு பொருளுக்காக அவர் கை வெட்டப்படுமா? அப்படியானால் (அவர் கை
வெட்டப்படுவதைத் தடுப்பதற்காக) அவருக்கு
அந்தத் துண்டை (மேல்
அங்கியை) நான் அன்பளிப்பாக வழங்கி விடுகின்றேன்” என்றார்கள்.
அதற்கு, “நீ
அவரை என்னிடம் குற்றவாளியாகப் பிடித்து வருவதற்கு முன்னரே
(அவரை மன்னித்து) அவருக்கு
அதை அன்பளிப்பாக வழங்கியிருந்தால் அதுசரி. (கை வெட்டும்
தண்டனை கிடைத்திருக்காது). ஆனால் இப்போது
(அப்படிச் செய்ய முடியாது)
நான் அவரை மன்னித்தால் அல்லாஹ் என்னை மன்னிக்க
மாட்டான் என்று நபி-ஸல்- கூறினார்கள். (நூல்: அபூதாவூத், பைஹகீ).
சமுதாயத்தைச் சுரண்டி
தான் வாழ நினைக்கும் குற்றவாளிகளிடத்தில் கனிவுகாட்டுவது நம்மை
நாமே ஏமாற்றிக் கொள்ளும்
ஏமாளித்தனம். குற்றங்களை நிறுத்திடும் வலிமை இறைச் சட்டங்களுக்கு மட்டுமே உண்டு என்பது
பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆம்.
மனிதன் தனக்குத் தானே
இயற்றிக் கொண்ட சட்டங்களால் தனக்கு எதிராக நடக்கும்
அநீதிகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மனிதனால் முடியவில்லை.
மது, விபச்சாரம், கொலை போன்ற மாபெரும்
தீமைகளை எதிர்த்துப் போராடும்
நோக்கத்தில் மனிதன் பல
சட்டங்களை வகுத்தான். அந்தச்
சட்டங்கள் தரும் தண்டனைகளால் அந்த தீமைகளை அகற்ற
முடியவில்லை. அந்த தீமைகளுக்கு முன்னால் அரசுகள் தோற்றன.
அரசே மதுக்கடைகளைத் திறந்தது.
விபச்சாரிகளுக்கு (லைசன்ஸ்) உரிமம்
வழங்கியது. அரசே என்
கவுண்டர் என்ற பெயரில்
கொலையும் செய்கிறது.
மனிதச் சட்டங்கள்
வழியாக மனிதனை ஆளவந்த
அரசுகள் எந்தத் தீமைகளை
எதிர்த்து சட்டங்களைக் கொண்டு
வந்ததோ அந்தத் தீமைகளை
மனித அரசுகளே செய்தன.
மனிதச் சட்டங்களின் பலஹீனம் என்னவென்றால் ஒரு
தீமையின் ஆபத்தை சரியாகப்
புரியாமல் அதற்கு எதிராக
பலவீனமான சட்டத்தை இயற்றி
தீமையை எதிர்க்கிறோம். தீமையை
ஒழிக்க முடியாமல் நாமே
அந்தத் தீமைக்கு பலியாகிறோம்.
திருட்டுக்கு எதிராக
(கை வெட்டு என்கிற)
கடும் தண்டனைக்கு பதிலாக
சில நாட்கள் மாமியார்
வீடு போன்ற சிறைச்
சாலைக்கு அனுப்புகிறோம். இந்த
பலஹீனமான தண்டனைகளால் திருட்டைத் தடுக்க முடியாத போது
நள்ளிரவில் வீடு புகுந்து
உயிர்களைத் திருடுகிறோம். என்கவுண்டர் என்கிறோம். கொலைகளைச் செய்கிறோம்.
மனிதனால் இயற்றப்பட்ட வலிமையற்ற
சட்டங்களை நடைமுறைபடுத்திடும் போது அதனால்
குற்றங்களை தடுத்திட இயலாமல்
போகிறது. இதனால் சலிப்புற்றிடும் மனிதன் ஒரு குற்றத்திற்கு என்ன தண்டனை தரவேண்டுமோ அதை விட்டுவிட்டு உயர்ந்த
பட்ச தண்டனையான மரண
தண்டனையை தந்து விடுகிறான்.
உறுதியான தண்டனையை
தந்திடும் இறை சட்டங்கள்
நாட்டை ஆளும் போது
மனிதன் உண்மையில் பாதுகாக்கப்படுகிறான். குற்றவாளிகள் உரிய தண்டனையை பெற்றிடும் போது சட்டத்தின் காவலர்களும் (என்கவுன்டர் போன்ற) குற்றங்களை செய்ய மாட்டார்கள். தண்டனையை அனுபவித்த குற்றவாளிகளும் மீண்டும் குற்றச் செயலில்
ஈடுபடமாட்டார்கள். சமூகமும் பாதுகாக்கப்படும்.
சட்டத்தை செயல்படுத்த வேண்டியவர்கள் சட்டத்தின் மீது
நம்பிக்கை இழக்கும் போது
என்கவுன்டர்கள் என்ற போலி
எதிர்தாக்குதல்கள் நடக்கத்தான் செய்யும்.
எனவே, மனித சட்டங்களை மாற்றி இறை சட்டங்களை ஆளச் செய்தால் இம்மையில் வெற்றி. இறைசட்டங்களை மட்டும் ஏற்றுக்கொள்வதோடு நின்றுவிடாமல் அதனை தந்த இறைவனையும் ஏற்றுக்கொண்டால் இம்மையிலும் வெற்றி மறுமையிலும் வெற்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக