وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَـٰذِهِ
الْقَرْيَةَ فَكُلُوا مِنْهَا حَيْثُ شِئْتُمْ رَغَدًا وَادْخُلُوا الْبَابَ
سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَّغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ ۚ وَسَنَزِيدُ
الْمُحْسِنِينَ ﴿٥٨ فَبَدَّلَ الَّذِينَ ظَلَمُوا قَوْلًا غَيْرَ الَّذِي قِيلَ
لَهُمْ فَأَنزَلْنَا عَلَى الَّذِينَ ظَلَمُوا رِجْزًا مِّنَ السَّمَاءِ بِمَا
كَانُوا يَفْسُقُونَ ﴿٥٩இன்னும் (நினைவு
கூறுங்கள்;) நாம் கூறினோம்;
" இந்த பட்டினத்துள் நுழைந்து
அங்கு நீங்கள் விரும்பிய
இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும்
போது, பணிவுடன் தலைவணங்கி
'ஹித்ததுன்' (-"எங்கள் பாபச்
சுமைகள் நீங்கட்டும்") என்று கூறுங்கள்;
நாம் உங்களுக்காக உங்கள்
குற்றங்களை மன்னிப்போம்; மேலும்
நன்மை செய்வோருக்கு அதிகமாகக்
கொடுப்போம். (58 ) ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம்
கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே
அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது
- (இவ்வாறு அவர்கள்) பாபம்
செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை
இறக்கிவைத்தோம். (59 )
இறைத் தூதர் மூஸா
(அலை) அவர்களின் தலைமையில்
எகிப்திலிருந்து புறப்பட்டு வந்தனர்
இஸ்ரவேலர்கள். அப்போது பைத்துல்
முகத்தஸ் அமைந்துள்ள ஜெரூசலம்
நகரத்துக்குச் செல்லும்படி அல்லாஹ்
கட்டளையிட்டான். அங்கே ஏற்கனவே
வாழ்ந்து வந்த 'அமாலிகா'
எனும் கூட்டத்தினரை எதிர்ததுப் போரிடும் படியும் உத்தரவிட்டான். எனினும் இஸ்ரவேலர்கள் போர்
புரிய மறுத்தனர். இதற்குத்
தண்டனையாகவே
'தீஹ்' என்னும் பாலைவனத்தில் நாற்பது ஆண்டுகள் அலைந்து
திரிந்து தவிக்கும்படி அல்லாஹ்
அவர்களை விட்டு விட்டான்.
என்பதையும் முன்னால் கூறப்பட்ட
வசனங்களின்
விளக்கங்களில் நாம் கண்டோம்.
இஸ்ரவேலர்கள் 'தீஹ்' எனும்
பாலைவனத்தில் சுற்றித் திரிந்த
காலக் கட்டங்களில் இறைத்தூதர் ஹாரூன் (அலை) (மூஸா நபியின் அண்ணன்)
அவர்கள் மரணமடைந்தார்கள். அதற்கடுத்து ஒன்றரை
ஆண்டுகள் கழித்து மூஸா
(அலை) அவர்களும் அல்லாஹ்விடம் சென்றடைந்தார்கள்.
(நூல் : மஆரிஃபுல் குர்ஆன்).
பின்னர் மூஸா நபியின்
நம்பிக்கைக் குரியவராகத் திகழ்ந்த
யூஷஉபின் நூன் அவர்கள்
இறைத்தூதர் ஆனார்கள். இவர்கள்
யூசுப் நபியின் வழித்
தோன்றல் ஆவார்கள். யூஷஉபின்
நூன் (அலை) தலைமையேற்ற காலத்தில் அமாலிகாவினரை வென்று
ஜெரூசலத்தினுள் நுழைந்து விட
வேண்டும் என்ற ஆர்வம்
இஸ்ரவேலர்களுக்கு ஏற்பட்டது.
இங்கு (58 - வது வசனத்தில்
கூறப்பட்டுள்ள (அல் கரியத்)
இவ்வூர் என்பது பைத்துல்
முகத்தஸ் (வீற்றிருக்கும் ஜெரூசலம்)
தான் என்பதை பல
அறிவிப்புக்கள் உறுதி செய்கின்றன.
(ஃபீ ழிலாலில்
குர்ஆன்).
இதைப் பின் வரும்
வசனமும் தெளிவுபடுத்துகின்றது. 'என் சமூகத்தினரே.... உங்களுக்காக அல்லாஹ் விதித்துள்ள புனித பூமியில் நுழையுங்கள். இன்னும் புறமுதுகு காட்டித்
திரும்பி விடாதீர்கள். (அப்படித்திரும்பினால்) நஷ்டமடைந்தவர்களாகவே நீங்கள்
திரும்புவீர்கள்' என்று மூஸா
கூறினார். (அல்குர்ஆன் : 5: 21).
எல்லாம்
வல்ல இறைவன் பிறப்பித்த இந்த உத்தரவை செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணம்
இஸ்ரவேலர்களுக்கு நாற்பது ஆண்டுகள்
கழித்தே ஏற்பட்டது. நீங்கள்
கலங்க வேண்டாம். நீங்கள்
வெற்றி பெறுவீர்கள். அமாலிகாவினர் தோல்வியடைவர். என்று நம்பிக்கையூட்டிய பின்னரும் இந்தப் போரில்
நீங்கள் புறமுதுகு காட்டித்
திரும்பினால் நஷ்டமடைவீர்கள் என்று
எச்சரித்த பின்னரும் அவர்கள்
போரிட முன் வரவில்லை,
என்பது குறிப்பிடத்தக்கது.
நாற்பதாண்டுகள் கழித்து செயல்
படுத்திய அந்தக் கட்டளையைக் கூட முழுமையாக மனப்பூர்வமாக செயல்படுத்தவில்லை. மாறாக கேலியும்,
கிண்டலும் செய்தனர். வெற்றி
பெற்றவர்களாக புனித பூமியில்
அவர்கள் நுழையும் போது
அவர்கள் இரு ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று
அல்லாஹ் கூறினான், ஒன்று,
தலை தாழ்த்திப் பணிந்தவர்களாகச் செல்ல வேண்டும்
என்பது. இது செயலில்
மேற்கொள்ள வேண்டியது. இன்னொன்று
'ஹித்தத்துன்' மன்னிப்பு என்று
கூறிக் கொண்டே செல்ல
வேண்டும். இது சொல்லில்
மேற்கொள்ள வேண்டியது.
ஆனால் இந்த இரு
கட்டளைகளையும் உதாசீனம் செய்து
விட்டனர் இஸ்ரவேலர்கள். அவ்விரு
கட்டளைகளையும் செயல்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல.
அவற்றை கிண்டல் செய்தனர்.
படைத்த இறைவன் மீது
கொஞ்சம் கூட பயமில்லாமல் பரிகாசம் செய்தனர். அதை
அடுத்த வசனத்தின் விளக்கத்தில் காணலாம்.
அவர்களுக்கு வெற்றியும் உதவியும்
கிடைத்ததற்காகவும், அவர்களுடைய முன்னோர்களின் பூமியான புனித பூமியை
அவர்களிடமே மீட்டுத் தந்ததற்காகவும் 'தீஹ்' எனும் பாலை
வனத்திலிருந்து விடுதலையளித்துப் பாதுகாத்தற்காகவும் நன்றி செலுத்துவதற்காக வேண்டி இவ்வாறு அல்லாஹ்
கட்டளையிட்டான். மேலும் இந்த
வெற்றியெல்லாம் அல்லாஹ்வின் உதவியினால் தான் கிடைத்தது. எங்கள்
உழைப்பினால் அல்ல, என்ற
பணிவை - தன்னடக்கத்தை வெளிப்படுத்துவதற்காக வேண்டியும் கடந்த காலத்தில் இழைத்த
குற்றங்களுக்காக மன்னிப்பு வேண்டுவதற்காக வேண்டியும் தான் அல்லாஹ்
அவ்விரு கட்டளைகளையும் இஸ்ரவேலர்களுக்குப் பிறப்பித்தான்.
இவ்வசனத்தில் 'பணிவாக' என்பதைக்
குறிக்க 'சுஜ்ஜதன்' எனும்
பதம் கூறப்பட்டுள்ளது. (இது சாஜித்
ஸஜ்தா செய்பவன் - என்பதன்
பன்மையாகும்) இதற்கு தலைகுனிந்தவர்களாக என்று
பொருள் என்று ஹழ்ரத்
இப்னு அப்பாஸ் (ரழி)
கூறுகின்றார்கள்.
(நூல் : அவ்ஃபீயை மேற்கோள் காட்டி
இப்னு கதீர்).
ஹித்ததுன் : அவ்வூருக்குள் அவர்கள்
நுழையும் போது 'மன்னிப்பு'
என்று கூறிக் கொண்டு
நுழையும் படி அல்லாஹ்
இஸ்ரவேலர்களுக்கு கட்டளையிட்டிருந்தான். இவ்வசனத்தில் 'மன்னிப்பு'
என்பதைக் குறிக்க 'ஹித்ததுன்'
என்ற பதம் கூறப்பட்டுள்ளது. எங்கள் பாவச் சுமைகளை
எங்களை விட்டு இறக்கி
வைப்பாயாக என்பதே இதன்
பொருள் என்று இமாம்
அஹ்ஃபஷ் (ரஹ்) கூறுகின்றார்கள்.
பாவ மன்னிப்பு
வேண்டுவதற்குரிய ஒரு வார்த்தை
அது என்று சிலர்
விளக்கமளித்துள்ளனர். இப்னுல் ஃபாரிஸ்
அவர்கள் முஜ்மல் என்ற
நூலிலும் ஜவ்ஹரீ அவர்கள்
சிஹாஹ் என்ற நூலிலும்
கூறுவதாவது: ஹித்தத்துன் என்பது
பனீ இஸ்ராயீல்கள் கூற
வேண்டும் என்று அல்லாஹ்
கட்டளையிட்ட ஒரு வார்த்தை.
அதை அவர்கள் கூறினால்
அவர்களின் பாவச் சுமைகள்
இறக்கி வைக்கப்பட்டிருக்கும்.
(நூல் : குர்த்துபீ).
உளப்பூர்வமாக நற்பணியாற்றுவோருக்கு அதிகமாக நாம்
வழங்குவோம் என்று அல்லாஹ்
இவ்வசனத்தின் கடைசியில் கூறியுள்ளான். முஹ்சினீன் - உளப்பூர்வமாக நற்பணியாற்றுவோர் என்றால், தன் ஏகத்துவ
நம்பிக்கையை சீராக வைத்துக்
கொண்டு அதன் படி
தன் ஆத்மாவை நிர்வகித்து, கடமைகளை நிறைவேற்றி முஃமின்களுக்கு தொல்லை தராமல் வாழ்வோர்
ஆவர்.
(நூல் : குர்த்துபீ).
எதிரணியை வீழ்த்தி வாகை
சூடி ஒரு நாட்டை
வெற்றி கொண்டு அதனுள்
நுழையும் போது பணிவோடு
செல்ல வேண்டும். ஆணவ
மனத்தோடு, அடங்காத செருக்கோடு அல்லாஹ்வை மறந்து விடக்கூடாது. அவனிடம் மன்னிப்புக் கோரியவர்களாகவே செல்ல வேண்டும். இறைநம்பிக்கையுள்ள வீரர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். அண்ணல் நபி
(ஸல்) அவர்கள் மக்கா
வெற்றி கொள்ளப்பட்ட நாளில்
தானும் பணிவோடு நடந்து
கொண்டார்கள். தன் தோழர்களையும் பணிவோடு நடந்து கொள்ளும்படி கட்டளையிட்டார்கள்.
ஆனால் இஸ்ரவேலர்கள் பணிய
மறுத்தனர். அடங்க மறுத்தனர்.
நன்றி கெட்டவர்களே நாங்கள்
என மீண்டும் நிரூபித்தனர். அதை அடுத்த வசனத்தில்
அல்லாஹ் கூறுகிறான்.
"ஆனால் அநியாயக் காரர்களான
அவர்கள் தங்களுக்குக் கூறப்பட்ட
வார்த்தை அல்லாதவேறு வார்த்தையாக (அதை) மாற்றி விட்டனர்.
எனவே அநீதி இழைத்த
அவர்கள் மீது அவர்கள்
பாவம் செய்து கொண்டிருந்ததால் வானத்திலிருந்து நாம் வேதனையை
இறக்கி வைத்தோம்"
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். நீங்கள்
அதன் (பைத்துல் முகத்தஸ்)
தலைவாசல் வழியாக பணிவுடன்
நுழையுங்கள். இன்னும் "மன்னிப்பு" என்று கூறுங்கள்
என்று இஸ்ரவேலர்களிடம் கூறப்பட்டது. ஆனால்
அவர்கள் தம் புட்டங்களால் தவழ்ந்து தவழ்ந்து நுழைந்தனர். (மேலும் ஹித்தத்துன் என்று
கூறுவதற்கு பதிலாக அதை
மாற்றி) 'ஹப்பத்துன் ஃபீஷஅரத்தின் (ஒரு தொலிக்கோதுமையில் ஒரு கோதுமை
மணி உள்ளது) என்று
கூறினர்.
(அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி)
நூல், புஹாரீ, முஸ்லிம்,
திர்மிதீ)
இப்படி அவர்கள் பிடிவாதமாக முரண்பட்டு நின்றதற்குக் காரணம்
அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு
புரிய வேண்டும் என்பதே.
இதனால் அல்லாஹ் அவர்களை
கடுமையாக தண்டித்தான். ஹழ்ரத்
இப்னு ஸைத் (ரழி)
கூறுகின்றார்கள்: பெரும் கொள்ளை
நோய் மூலம் அல்லாஹ்
அவர்களை தண்டித்தான். அவர்களில்
எழுபதாயிரம் பேர் இதனால்
மாண்டனர்.
(நூல் : குர்த்துபீ).
இந்த வேதனையால் ஒரு
மணி நேரத்தில் இருபத்து
நான்காயிரம் பேர் மாண்டனர்
என்றும் கூறுப்படுகிறது (நூல்
: ரூஹுல் மஆனி. அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ்
ரழி)
ஹழ்ரத் அப்துல்லாஹ் பின்
மஸ்வூத்(ரழி) கூறுகின்றார்கள். "அந்த நகரின் தலைவாசலில் தலைகுனிந்து பணிவோடு நுழையும்
படி இஸ்ரவேலர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். ஆனால் அவர்கள் தலையை
உயர்த்தியபடி சென்றனர்”
(நூல்
: இப்னு கதீர்).
இந்த வசனத்திலிருந்து நமக்குக்கிடைக்கும் படிப்பினை என்னவெனில் குர்ஆன் மற்றும் ஹதீஸில்
கூறப்பட்டுள்ள அதேஅடிப்படையில் நம் துஆக்கள்
அமைய வேண்டும். அதில்
கூறப்பட்டுள்ள வார்த்தைகளை நம்
விருப்பப்படி மாற்றிடுவது பெரும்
தவறாகும். ஏனெனில் அல்லாஹ்வும் அவனின் திருத்தூதரும் கற்றுத்தரும் வார்த்தைகள் ஆழமான அழுத்தமான
பொருள் கொண்டவை ஆகும்.
அதனை அப்படியே நாம்
கூற வேண்டும். அர்த்தம்
மாறிவிடும் அளவுக்கு வாத்தைகளை
மாற்றிக் கூறுவது ஹராம்
ஆகும்.
(நூல் : மஆரிஃபுல் குர்ஆன்).
அண்ணல் நபி (ஸல்)
அவர்கள் ஹழ்ரத் பராவு
பின் ஆஸிப் (ரழி)
அவர்களுக்கு இரவு உறங்கச்
செல்லும் போது ஓத
வேண்டிய துஆவைக் கற்றுக்
கொடுத்தார்கள். பிறகு அந்த
துஆவை பராவு (ரழி)
அவர்கள் திரும்ப ஓதிக்
காட்டினார்கள். அப்போது "இறைவா...! அனுப்பிய
உன் நபியையும் நான்
நம்பினேன்" என்று கூறுவதற்கு பதிலாக நீ அனுப்பிய
உன் ரசூலையும் நம்பினேன்
என்று மாற்றி ஓதினார்கள். உடனே நபி (ஸல்)
அவர்கள் குறுக்கிட்டு "இல்லை, நீ
அனுப்பிய உன் நபியை
நம்பினேன் என்று கூறு"
என்று திருத்திக் கொடுத்தார்கள்.
(நூல்
: புஹாரீ 6311).
நபி என்பதும்
ரசூல் என்பதும் ஏறத்தாழ
ஒரே பொருள் கொண்ட
வார்த்தை போலத் தோன்றினாலும் இவ்விரண்டுக்குமிடையே நுண்ணிய வேறுபாடு
உள்ளது. எனவே, தான்
சொல்லிக் கொடுத்தபடியே சொல்லும்
படி நபி (ஸல்)
கட்டளையிட்டார்கள்.
பொருள் முற்றிலுமாக மாறிவிடும் அளவுக்கு வார்த்தைகள் மாற்றுவது
அறவே கூடாது.
அண்ணல் நபி (ஸல்)
அவர்களின் வளர்ப்பு மகனாக
இருந்த ஹழ்ரத் ஸைத்
பின் ஹாரிஸா (ரழி)
அவர்களின் மனைவி அன்னை
உம்மு அய்மன் (ரழி)
அவர்கள் நாக்குத் தடுமாற்றம் உள்ளவர்கள். சில எழுத்துக்களை சரியாக அவர்களுக்கு உச்சரிக்க
தெரியாது என்பதால் அவர்களை
நபி (ஸல்) வாய்மூடி
மவுனமாக இருக்கும் படி
கூறுவார்கள்.
"ஸலாமுன் அலைக்கும் (உங்கள்
மீது அமைதி நிலவட்டும்) என்று கூறுவதற்குப் பதிலாக
"ஸலாமுன் லா அலைக்கும்"
(அமைதி உங்கள் மீது
நிலவாதிருக்கட்டும்) என்று தவறுதலாகக் கூறி விடுவார்கள். "அஸ்ஸலாமு" என்று மட்டும்
கூறும்படி அவர்களுக்கு அனுமதி
வழங்கினார்கள் நபி (ஸல்)
அவர்கள்.
ஹழ்ரத் அபூல் ஹீவைரிஸ்
(ரழி) கூறுகின்றார்கள். ஹீனைன் யுத்தம்
நடைபெற்ற தினத்தில் போரில்
கலந்து கொள்ள சென்ற
முஸ்லிம் வீரர்களிடம் உம்மு அய்மன் (ரழி)
அவர்கள் 'ஸப்பத்தல்லாஹு அக்தாமக்கும் (உங்கள் பாதங்களை அல்லாஹ்
களத்தில் உறுதியாக நிலைத்திருக்கச் செய்வானாக) என்று கூறுவதற்குப் பதிலாக தவறுதலாக 'சபத்தல்லாஹு அக்தமாக்கும்' (உங்கள் பாதங்களை
அல்லாஹ் துண்டிப்பானாக என்று
பொருள் அனர்த்தமாக மாறும்படி)
கூறி விட்டார்கள். இதனைக்
கேட்டுக் கொண்டிருந்த நபி
(ஸல்) அவர்கள் அன்னை
உம்மு அய்மன்(ரழி)
யிடம் கூறினார்கள்: நீங்கள்
சில எழுத்துக்களை உச்சரிக்க
இயலாதவர். எனவே மவுனமாக
இருங்கள். (அர்த்தம் மாறும்படி
எதுவும் கூறிக் கொண்டிருக்க வேண்டாம்)
(நூல் : அத்தபகாத்துல் குப்ரா).
சில எழுத்துக்கள் மாறுவதால் அர்த்தமே மாறிவிடும் எனும் போது குர்ஆன்
ஹதீஸில் வந்துள்ள துஆக்களின் வார்த்தைகளையே மாற்றுவதில் எச்சரிக்கையாக நாம் இருக்க வேண்டும்.
வேண்டுமென்றே வார்த்தைகளை மாற்றி
ஓதுவது பெரும் குற்றம்
ஆகும்.
மேலும் இந்த 59 ஆவது
வசனத்தில் "அநியாயக்காரர்கள் வார்த்தைகளை மாற்றிக்
கூறினர். அந்த அநியாயக்காரர்கள் மீது வானத்திலிருந்து தண்டனையை இறக்கி
வைத்தோம்" என அநியாயக்காரர்களை மட்டும் குறிப்பிட்டு அல்லாஹ்
கூறுகிறான்.
மொத்த இஸ்ரவேல் சமுதாயத்தில் சிலரை மட்டும் கொள்ளை
நோய் பற்றிக் கொண்டது
என்று பொருள். எல்லோரும்
அந்தப் பாவத்தைச் செய்திருந்தால் எல்லோரும் கொள்ளை நோயால்
பாதிக்கப்பட்டனர் எனக் கருத
வேண்டும்.
(நூல் : பீழிலாலில் குர்ஆன்).
இன்ஷா அல்லாஹ் தொடரும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக