செவ்வாய், 11 டிசம்பர், 2012

எது முதலில்?



பேரறிஞர் யூசுப் அல் கர்ளாவி
தொடர் - 1
மார்க்கத்தின் சட்டங்கள், நம்முடைய செயல்பாடுகள், மதிப்புமிக்க அறச்செயல்கள் இவை ஒவ்வொன்றுக்கும் அதனதற்குரிய உயர்வையும் மதிப்பையும் தர வேண்டும்.
இதுவே இன்றைய உலகில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஞானம்.
வஹீ எனும் இறைச் செய்தியும் நம் அறிவும் வழிகாட்டும் ஒளிவிளக்குகள். இவற்றின் துணையுடன் நற்செயல்களை தரவரிசைப்படி நாம் நிறை வேற்ற வேண்டும்.
முக்கியமற்றது, முக்கியமானது, அதிமுக்கியமானது-சரியானது, சிறப்பானது, வெகு சிறப்பானது-முதலிடம் தரப்பட வேண்டியது. பின்னால் வைக்கப்பட வேண்டியது என்பன நிறைய உள்ளன. ஒவ்வொன்றுக்கும் அதனதன் தரத்தை நாம் தர வேண்டும்.
‘ஃபிக்ஹுல் அவ்லவிய்யாத்’ என்று இதற்கு நான் (முன்னுரிமை தரப்பட வேண்டியவை பற்றிய ஞானம்) பெயர் சூட்டியுள்ளேன். என்னுடைய நூல்களில் ஒன்றான ‘அஸ்ஸஹ்வத்துல் இஸ்லாமிய்யா பைனல் ஜுஹுதி வத்த தர்ருஃபி’ (ஒரு பக்கச் சார்புக்கும் ஒரேடியான மறுப்புக்குமிடையே இஸ்லாம் தரும் விழிப்புணர்வு) எனும் நூலில் ‘ஃபிக்ஹு மராக்திபில் அஃமால்’ (செயல்களின் தரங்கள் பற்றிய ஞானம்) என்று இதைக் கூறியுள்ளேன், பெயர்கள் வேறு வேறே தவிர இரண்டும் ஒன்றுதான்.
முதலிடம் தரவேண்டியதை முற்படுத்த வேண்டும். தாமதப்படுத்த வேண்டியதைப் பிற்படுத்த வேண்டும். சின்ன விஷயத்தைப் பெரிதாக்கக் கூடாது முக்கியமானதை அற்பமாகக்கருதி இலகுவாக விட்டு விடக் கூடாது.
கூடுதல் குறைவு இன்றி நியாயத் தராசு கொண்டு நிறுத்துப் பார்த்து ஒவ்வொன்றையும் அதற்குரிய தரத்தில் வைக்க வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: (அவன்தான்) வானத்தை உயர்த்தினான் சீர்தூக்கிப்பார்ப்பதில் நீங்கள் வரம்பு மீறாமலிருப்பதற்காக (நன்மை, தீமைகளை சீர்து£க்கிப் பார்த்திடும்) தராசையும் ஏற்படுத்தினான்.
எனவே நீங்கள் நீதமாக சீர்தூக்கிப் பார்ப்பதை நிலை நாட்டுங்கள். எடை பார்ப்பதில் குறைவைக்காதீர்கள் (55:7,8,9).
எனவே நன்மைகளையும் தீமைகளையும் சீர்து£க்கிப் பார்த்திடும் ஞானம் மிக அவசியமானது.
இஸ்லாத்தின் சட்டங்களும் செயல்பாடுகளும் மதிப்பீடுகளும் ஒரே தரத்தில் அமைந்திடவில்லை. அவற்றுக்கிடையே பெரிய ஏற்றத் தாழ்வுகள் உண்டு. சிறியவை, பெரியவை - பூர்விகமானவை, கிளை போன்றவை - தூண் போன்றவை, நிறைவுதருபவை - முதுகெலும்பு போன்றவை, ஓரஞ்சாரத்திலிருப்பவை - உயர்ந்தவை, தாழ்ந்தவை - சுமாரானவை, சிறந்தவை என பலப்பல உள்ளன. இதை நாம் சொல்லவில்லை.
திருக்குர்ஆன் இதை நமக்கு உணர்த்துகிறது ஹாஜிகளுக்குத் தண்ணீர் தரும் சேவை செய்வோரையும் (கஅபா எனும்) புனிதப் பள்ளிவாசலை நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்விடத்தில் இவ்விருவரும் சமமானவர்களல்லர். அநியாயக் காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.
யார் இறை நம்பிக்கை கொண்டு தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் மகத்தான அந்தஸ்தில் இருப்பர், அவர்களே வெற்றியாளர்கள். (9:19,20).
அண்ணல் நபி ஸல் - கூறினார்கள்: இறை நம்பிக்கை (ஈமான்) எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டது. அவற்றுள் மிக உயர்ந்தது “வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, எதுவுமில்லை” என்பது. அவற்றுள் மிகத் தாழ்ந்தது, வழியில் கிடக்கும் இடையூறுகளை அகற்றுவது (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) நு£ல்: முஸ்லிம்)
மிகச்சிறந்த செயல் (அஃப்ழலுல் அஃமால்) எது? அல்லாஹ் மிகவும் விரும்புவது (அஹப்புல் அஃமாலி இலல்லாஹ்) எதை? என்றே அவர்கள் அதிகமாகக் கேட்டுள்ளனர். இப்னுமஸ்ஊத் (ரழி) அபூதர் (ரழி) இன்னும் பல நபித் தோழர்கள் இவ்வாறான கேள்விகளைக் கேட்டதும் அவற்றுக்கு நபி - ஸல் - அவர்கள் “இது மிகச் சிறந்த அமல்” “இது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்த செயல்” என்று பதில் கூறியுள்ளார்கள். இவ்வாறான ஹதீஸ்கள் ஏராளம் ஏராளம் உள்ளன.
ஒரேயொரு ஹதீஸ் மட்டும் இங்கு கூறினால் போதும் என்று நினைக்கிறேன்.
“இஸ்லாம் என்றால் என்ன?” என்று ஒருவர் நபி ஸல் - அவர்களிடம் கேட்டார். அதற்கு, “உன் உள்ளம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவதும் உன் நாவினால், கரத்தினால் ஏற்படும் தீங்குகளிலிருந்து இதர முஸ்லிம்கள் நிம்மதியாக இருப்பதும் தான்” என்று நபி - ஸல் - பதில் கூறினார்கள். பிறகு அவர் “இஸ்லாத்தில் எது மிகச் சிறந்தது?” என்று கேட்டார் அதற்கு “ஈமான் - இறை நம்பிக்கை தான்” என்று நபி பதில் கூறினார்கள் பிறகு “ஈமான் என்றால் என்ன?” என்று அவர் கேட்டார். அதற்கு “அல்லாஹ்வையும் மலக்குகளையும் வேதங்களையும் இறைத்து£தர்களையும் மரணத்துக்குப்பின் மீண்டும் உயிர் பெற்று எழுவதையும் நம்புவதே ஈமான்” என்று நபி-ஸல்- பதில் கூறினார்கள்.
பிறகு அம்மனிதர் “ஈமானில் எது சிறந்தது?” என்று கேட்டார். அதற்கு நாடு துறந்து தியாகப் பயணம் மேற்கொள்தல் (ஹிஜ்ரத்) என்று நபி பதில் கூறினார்கள். அவர் “ஹிஜ்ரத் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு “தீமையை வெறுப்பது தான் ஹிஜ்ரத்” என்று நபி-ஸல்- பதில் கூறினார்கள். அம்மனிதர் “ஹிஜ்ரத்தில் எது சிறந்தது?” என்று கேட்டார். “ஜிஹாத்” என்று அதற்கு நபி-ஸல்- பதில் கூறினார்கள். “இறை மறுப்பாளர்களை (போர்க்களத்தில்) எதிர் கொண்டால் அவர்களோடு சண்டை போடுவதுதான் ஜிஹாத்” என்றார்கள் நபி-ஸல்-. அம்மனிதர் “ஜிஹாதில் எது சிறந்தது?” என்று கேட்டார். “உயிர் நரம்பு அறுக்கப்பட்டு ரத்தம் ஓட்டப்படும் அளவுக்கு ஜிஹாத் செய்தவரின் ஜிஹாதே சிறந்தது” என்று நபி-ஸல்- பதில் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அம்ருபின் அபஸா (ரழி) நூல்: அஹ்மது, தபரானி)
ஒரு கேள்விக்குரிய பதிலாகவோ ஒரு சூழ்நிலையை விவரிக்கும் வகையிலோ இது போல் வந்துள்ள குர்ஆன் வசனங்களையும் (சுன்னா) நபி வழியையும் ஆராய்ந்து பார்த்தால் இஸ்லாமியக் கடமைகள் மதிப்பீடுகள் நற்செயல்கள் இவற்றுள் மிகச்சிறந்தது, மிக உயர்ந்தது, அல்லாஹ்வுக்கு விருப்பமானது எது என்பதை விளக்கும் அளவு கோல்கள் நமக்கு முன்னால் மொத்தமாக முன்வைக்கப்பட்டுள்ளன என்பதைத் தெள்ளென விளங்கமுடியும்.
சில நபி மொழிகள் எது எதைவிட உயர்ந்தது என்று விபரமாகக் கூறியுள்ளன. பின்வரும் நபிமொழிகளைப் பாருங்கள்.
“ஜமாஅத்துடன் தொழுவது தனியாகத் தொழுவதைவிட இருபத்து ஏழு மடங்கு சிறந்தது” (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரழி) (நு£ல்: புஹாரி, முஸ்லிம்).
“ஒருவரிடம் இரு வெள்ளிக் காசுகள் மட்டும் இருந்தன. அவற்றில் ஒன்றை தர்மம் கொடுத்து விட்டார். (அதாவது தன் சொத்தில் பாதியை தர்மம் செய்து விட்டார்) இன்னொருவரிடம் பெரும் செல்வம் இருந்தது. அதில் ஒரு லட்சம் தர்மம் செய்தார். இந்த ஒரு லட்சத்தை அந்த ஒரு திர்ஹம் முந்திவிட்டது” (அறிவிப்பாளர்: அபுஹுரைரா (ரழி) நு£ல்: நஸயீ, இப்னு ஹுசைமஈ, இப்னுஹிப்பான், ஹாகிம்).
“ஒரு இரவு, ஒரு பகல் அல்லாஹ்வின் பாதையில் தன்னைப் பிணைத்துக் கொள்வது ஒரு மாதம் நோன்பு நோற்பதை விட ஒரு மாதம் நின்று வணங்குவதை விட சிறந்தது” (அறிவிப்பாளர்: ஸல்மான் (ரழி) நு£ல்: முஸ்லிம், திர்மிதி)
உங்களில் ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் நிலைபெற்றிருப்பது தன்வீட்டில் எழுபது ஆண்டுகள் தொழுவதை விடச் சிறந்தது (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) நூல்: திர்மிதி)
இந்த நபி மொழிகளைப் பாருங்கள். நன்மைகளில் உயர்ந்தது மிக உயர்ந்தது என இருக்கிறதல்லவா? இது போல தீமைகளை விளக்கும் அளவுகளும் மார்க்கத்தில் உள்ளன. தீமைகளிலும் பல தரங்கள் உள்ளன.
சிறுபாவங்கள், பெரும்பாவங்கள், சந்தேகத்திற்கிடமானவை, அருவருக்கத்ததக்கவை, இப்படி பல தரங்களில் தீமைகள் உள்ளன.
“இது வட்டி தான் என்று தெரிந்துகொண்டே வட்டிவருமானத்தில் ஒரு வெள்ளிக்காசு அளவு ஒருவர் சாப்பிட்டாலும் முப்பத்து ஆறு தடவை விபச்சாரம் செய்வதைவிட கொடிய பாவமாக அல்லாஹ்விடத்தில் அது கருதப்படும் ” (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரழி) நூல்: அஹ்மது, தப்ரானி)
“கடும் கஞ்சத்தனமும் பயங்கர கோழைத்தனமும் ஒரு மனிதனிடம் இருக்கின்ற தீமைகளிலெல்லாம் மிகத் தீயது”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) நூல்: அபூதாவூத்).
“அல்லாஹ்வின் பெயர் கூறி யாசகம் கேட்கப்பட்டும் எதுவும் கொடுக்காதவனே மனிதர்களில் மிக மோசமானவன்” (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல்: அஹ்மது, திர்மிதி, இப்னு ஹிப்பான்).
“அனாவசியமாக வரம்பு மீறி பெரும் பேச்சுப் பேசுபவர்களே என் சமுதாயத்தில் ஆக மோசமானவர்கள். நற்குணம் மிக்கவர்களே என் சமுதாயத்தில் மிகச் சிறந்தவர்கள்” (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி) நூல்: அல்அதபுல் முஃப்ரத்).
“தொழுகையில் ருகூவு சுஜுத்களை சரியாக நிறைவேற்றாமல் தொழுகைகையத் திருடுபவனே பெரிய திருடன். பிறருக்கு சலாம் கூறாமல் கஞ்சத்தனம் செய்பவனே பெரிய கஞ்சன்” (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் முஞஃப்பல் (ரழி) நூல்: தப்ரானீ).
மனிதர்கள்கூட எல்லோரும் ஒரே தராதரத்தில் இருப்பதில்லை. தோற்றத்தில் ஒரே மாதிரி இருந்தாலும் அறிவாற்றல் செயல்திறன் இவற்றுள் மனிதர்களுக்கிடையே பெரும் ஏற்றத்தாழ்வுகள் இருக்கத்தான் செய்கின்றன.
கீழ்காணும் திருக்குர்ஆன் வசனங்களைப் பாருங்கள்:
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் ஒருவர் மற்றொருவரிடம் அறிமுகமாகிக் கொள்வதற்காக உங்களைப் பல கிளைகளாகவும் பல கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் மிக பயபக்தியுள்ளவரே அல்லாஹ்விடத்தில் மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் நன்கு தெரிந்தவன் (26:13).
அறிந்தவர்களும் அறியாதவர்களும் சமமாவார்களா- என்று கேட்பீராக (39:9).
இறை நம்பிக்கையாளர்களில் உடல் உபாதை உள்ளவர்கள் தவிர (போருக்குச் செல்லாமல்) உட்கார்ந்திருப்பவர்களும் அல்லாஹ்வின் பாதையில் தங்களின் பொருள்களையும் உயிர்களையும் அர்ப்பணித்துப் போரிடுபவர்களும் சமமாக மாட்டார்கள். தம் பொருள்களையும் உயிர்களையும் அர்ப்பணித்துப் போரிடுபவர்களை உட்கார்ந்திருப்பவர்களைவிட அந்தஸ்தில் சிறப்பு மிக்கவர்களாக்குகிறான் அல்லாஹ். அனைவருக்கும் நல்லதை அல்லாஹ் வாக்களித்துள்ளான். போரிடுபவர்களுக்கு மகத்தான கூலி வழங்கி உட்கார்ந்திருப்பவர்களைவிட அல்லாஹ் சிறப்பாக்கியுள்ளான் (4:95,96).
குருடனும் பார்வையுள்ளவனும் சமமாக மாட்டார்கள், இருள்களும் ஒளியும் சமமாகாது. நிழலும் வெயிலும் சமமாகாது, உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள் (35:19,22).
பிறகு நம் அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டவர்களை நம் வேதத்துக்கு வாரிசாக்கினோம். அவர்களில் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டோரும் உண்டு. நடுநிலையாளர்களும் உண்டு. அல்லாஹ்வின் கட்டளை கொண்டு நன்மைகளில் முந்திச் செல்பவர்களும் உண்டு. இதுவே மிகப்பெரும் அருள் (35:32).
ஜிஹாத் அறப்போர் - தக்வா (பயபக்தி) நற்செயல், கல்வி ஆகியவற்றால் மனிதர்கள் தமக்கிடையே பல்வேறு படித்தரங்களில் உள்ளனர் என்பதற்கு மேற்கண்ட வசனங்கள் சான்றுகளாகத் திகழ்கின்றன. இதுபோலவே நற்செயல்களில் பல படித்தரங்கள் உள்ளன.

           தமிழில்: இல்யாஸ் ரியாஜி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக