செவ்வாய், 11 டிசம்பர், 2012

இஸ்லாத்திற்கு முன் உலகம் எப்படி இருந்தது ?


ஆறாம் நூற்றாண்டில் சீனா:

பேரறிஞர்அபுல் ஹசன் அலீ நத்வி,
 மொழிபெயர்ப்பு : அஹ்மது ஜலாலுத்தீன் நத்வி
        கி.பி. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் சீனாவில் மூன்று மதங்கள் மக்களை வழிநடத்தும் மதங்களாக விளங்கின.
        1. லாயுட்சு மதம் (Lao - Eseu).
        2. கன்ஃப்யூசியஸ் மதம்.
        3. புத்த மதம்.
        இவற்றுள் லாயுட்சு (Lao - Eseu) மதம் செயல்களை விட தத்துவங்களுக்கே முன்னுரிமை தந்தது. எனவே இது கொஞ்ச காலத்திலேயே சிலை வணக்க மதமாக மாறிப்போனதில் ஆச்சரியமில்லை. இம்மதத்தைப் பின் பற்றியவர்கள் பஞ்சப் பராரிகளைப் போல் ஆடைகளை உடுத்திக் கொண்டு துறவிகளாய்த் திரிந்தனர். இவர்கள் பெண்களை ஏறிட்டுக் கூட பார்க்க மாட்டார்கள். திருமணம் செய்து கொள்வதில்லை. பெண்களோடு எவ்வித ஒட்டும் உறவும் வைத்துக் கொள்வதில்லை.
        மொத்தத்தில் மனிதன் சீராக வாழ்வதற்கான வழிமுறைகளோ நேர்மையாக ஆள்வதற்காக சட்டதிட்டங்களோ இல்லாத மதமாக அது இருந்தது. இதனால் அம்மதத்தை நிறுவிய (Lao - Eseu) வுக்குப் பின்னர் வந்தவர்களெல்லாம் அம்மதத்தைப் பின்பற்றவில்லை. வேறுவழிகளைத் தேடிப் போய் விட்டனர்.
கன்ஃப்யூசியம்.
        இது அறிவார்ந்த தத்துவங்களை விட செயல்களுக்கே முன்னுரிமை தந்தது. இதன் போதனைகள் உலகியல் விஷயங்களையே பேசிக்கொண்டிருந்தன. நிர்வாகம், அரசியல், உலகாயதக் காரியங்கள் பற்றி மட்டுமே போதித்தது கன்ஃப்யூசிய மதம்.
        இம்மதத்தைப் பின் பற்றுபவர்கள் 'ஒரே கடவுள்' என்ற கொள்கையில் நம்பிக்கையற்றவர்களாக இருந்துள்ளனர்.
        நதிகள், மரங்கள் என தமக்குப் பிடித்ததையெல்லாம் வணங்கிக் கொண்டிருந்தார்கள். அம்மதத்தில் சத்தியமார்க்கத்தின் வெளிச்சமோ இறைவழிகாட்டுதலோ, இறை நம்பிக்கையைத் தூண்டும் அம்சங்களோ அறவே இருக்கவில்லை.
        மனிதன் நினைத்தால் எடுத்துக் கொள்ளக் கூடிய, நினைத்தால் உதறித் தள்ளிவிடக் கூடிய அளவிலான தத்துவ ஞானிகளின் தத்துவங்களும், அனுபவசாலிகளின் அனுபவங்களுமே கன்ஃப்யூசிய மதத்தில் இருந்தன.
புத்தமதத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்.
        ஆறாம் நூற்றாண்டில் புத்த மதமோ தன் அழுத்தத்தையும் களத்தையும் இழந்துவிட்டிருந்தது. புத்தமதத்தின் மீது வகை தொகையற்ற அத்து மீறல்களையும், அநியாயங்களையும் அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்த பிராமணீயம் புத்தமதத்தை விழுங்கியே விட்டது. எனவே புத்த மதமும் சிலை வணக்க மதமாக மாறிப் போனது.
        புத்தர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் சிலைகளையும் கொண்டு சென்றார்கள். தங்கிய இடங்களிளெல்லாம் ஆலயங்களைக் கட்டினார்கள் அதில் சிலைகளை நாட்டினார்கள்.
        புத்த மதம் தனது வனப்பான காலக் கட்டங்களில் மனித குலத்துக்கு வழங்கிய நாகரிகம், மதம் சார்ந்த வாழ்க்கை இவை அனைத்தையும் மூடி மறைத்து அழித்துவிட்டது  புத்தமதத்தில் நுழைந்த சிலை வணக்கம்.
        இந்தியப் பல்கலைக் கழகமொன்றில் 'இந்தியக் கலாச்சாரத்தின் வரலாறு' என்ற துறையின் பேராசிரியரான ஈஷ்வர் அதுபா கூறுகிறார்  புத்த மதத்தின் ஆதரவில் உருவான சாம்ராஜ்யங்கள் சிலை வணக்கத்தையும் அவதாரக் கோட்பாட்டையும் ஆதரித்தன. புத்த சகோதரத்துவக் கூட்டமைப்புகளின் களமாக புத்தமதம் மாறிவிட்டது. பிற மதத்தின் அம்சங்கள் அதில் புகுந்தன. பின்னர் இவையே புத்த மதமாகக் கருதப்பட்டன.
       (ஆதாரம்: பூர்வீக இந்தியா. அல்ஹின்துல் கதீம்).
        வரலாற்று ஆய்வாளரும் இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களுள் ஒருவருமான ஜவஹர்லால் நேரு அவர்கள் இப்படிச் சொல்கிறார். 'புத்தர் கடவுளின் அவதாரம்' என்று பிராமணீயம் கூறியது. இதை புத்தர்கள் அப்படியே ஏற்றுக் கொண்டனர். பின்னர் 'புத்த சகோதரத்துவக் கூட்டமைப்பு' ஏராளமான செல்வங்களைக் குவித்தது. புத்தமடங்கள் குறிப்பிட்ட சில குழுக்களின் நல்வாழ்வு மையங்களாக மாறிப் போய்விட்டன. கட்டுக் கோப்பை அவை இழந்து நின்றன. அவர்களின் வழிபாட்டு முறைகளில் சூனியங்களும் மூடநம்பிக்கைகளும் புகுந்தன.
        ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் வனப்போடு வாழ்வாங்கு வாழ்ந்த, இந்தியாவை வழிநடத்திய புத்தமதம் வீழ்ச்சியை நோக்கிப் போனது. பின்னுக்குச் சென்றது.
        இக்கால கட்டத்தில் புத்த மதத்தைப் பீடித்த நோய், மரணபயம் இவற்றைப் பற்றி Mrs. Rhys Davids கூறுவதாக டாக்டர் ராதா கிருஷ்ணன் அவர்கள் தனது 'இந்தியத் தத்துவம்' எனும் நூலில் கூறுகிறார்.
        "கவுதம புத்தருடைய அறப் போதனைகளெல்லாம் கரைபடிந்த அழுக்குச் சிந்தனைகளின் தாக்குதலில் மறைந்து போய்விட்டன. அதிலிருந்து புதிய மார்க்கம் தோன்றி, வளர்ந்து மக்களின் மனங்களை ஆக்கிரமித்தது. பிறகு அதுவும் சிதைந்தது. பிறகு மற்றொரு புதிய மார்க்கம் அதிலிருந்து தோன்றி அதுவும் அழிந்தது... இது தொடர்கதையானது.
        பின்னர் பகட்டான மூடக்கொள்கைகள் அடர்த்தியாக வந்து மூடி மறைத்தன. ஆகாயம் மறைந்தது. இருள் எங்கும் வியாபித்து நின்றது. புத்தம் மறைந்தது, மித மிஞ்சிய சொல்வன்மை சாமர்த்தியமான பேச்சுக்கள் இவற்றுள் மதிப்பு மிக்க புத்தர்நெறி சிதைந்தது அழிந்தது"
        (ஆதாரம்: The Discovery of  India - By  Jawaharlal Nehru).
        ஆக, புத்தமும் பிராமணீயமும் வீழ்ச்சியுற்றன. அவற்றில் அனாச்சாரங்கள் நுழைந்தன. இவ்விரு மதங்களுக்கிடையே வேறுபாட்டைக் கண்டறிவதே சிரமமாகி விட்டது. பிராமணீயத்தில் கலந்து உருகிப் போய்விட்டது புத்த மதம்.
                        (ஆதாரம்: அதே நூல்).
        புத்த மதத்தைப் பொறுத்த அளவில் இறைவன் என்றொருவன் இருக்கின்றானா? அவனை நம்பத்தான் வேண்டுமா? என்பதெல்லாம் சந்தேகத்துக்குரியதாகவும் கருத்து வேறுபாட்டுக்குரியதாகவுமே இருந்து வருகின்றது. புத்தமத வரலாற்றை எழுது வோரிடையேயும் அதன் நிறுவனர் கவுதம புத்தரின் வரலாற்றை எழுது வோரிடையேயும்.
        எந்த அளவுக்கு என்றால் வரலாற்று ஆய்வாளர்கள் சிலர்  "இறைநம்பிக்கை என்று எதுவுமில்லாத ஒழுக்கங்கள் என்ற மெல்லிய அடித்தளத்தின் மீது மட்டும் மாபெரும் மதம் ஒன்று நிலைபெற்று விடுவது எப்படி சாத்தியம்?" என்று எதிர்க்கேள்வி ஒன்றை முன்வைக்கின்றனர்.
        (நூல்: என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா).
        ஆனால் மனப்பயிற்சி, ஆசையை அடக்குதல், நற்குணங்களைக் கடைப்பிடித்தல், எவரையும் எதையும் துன்புறுத்தாமலிருத்தல், பெற்ற கல்வியைப் பேணிக்காப்பது ஆகியவற்றுக்கு வழிகாட்டுவதாகவே புத்தமதம் இருந்தது.
        மொத்தத்தில் உலகப் பிரச்சனைகளைத் தீர்க்கும் வல்லமையைப் பெற்ற எந்தக் கொள்கையும் சீனர்களிடத்தில் இருக்கவில்லை. விரிந்து பரந்த இப்பாருலகின் கீழ் கோடியில் வீற்றிருந்த சீனர்கள் கல்வி, மதம் ஆகியவற்றில் தமது பாரம்பரியப் பெருமையை இழந்து விடாமல் பேணிக்காத்து வந்திருந்த போதும் தமக்கோ மற்ற சமுதாயத்துக்கோ பெரிதாக எதையும் செய்துவிடவில்லை.
மத்திய ஆசிய சமுதாயங்கள்.
        மத்திய ஆசியாவிலும் கிழக்காசியாவிலும் முகலாயர்கள் துருக்கியர்கள், ஜப்பானியர்கள் போன்ற சமுதாயங்கள் இருந்தன. இவை உருக்குலைந்து போன புத்தமதம் மூர்க்கத்தனமான சிலை வணக்கம் ஆகியவற்றுக்கிடையே தட்டழிந்து கொண்டிருந்தன.
        மிக்குயர்ந்த அரசியல் அமைப்பையோ அறிவுச் செல்வத்தையோ பெற்ற சமுதாயமாக அவை அக்காலத்தில் இருக்கவில்லை. காட்டுமிராண்டிக் காலக்கட்டத்திலிருந்து நாகரிக காலம் நோக்கிச் செல்லும் கால கட்டமாகவே அவர்களுக்கு அது இருந்தது. அச்சமுதாயங்களுள் சில அறியாமையிலிருந்து கொண்டே அறிவின் தொடக்கத்தில் அடியெடுத்து வைத்திருந்தன.
                இன்ஷா அல்லாஹ் தொடரும்.
           தமிழ் வடிவம்.   இல்யாஸ் ரியாஜி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக